சூறாவளி காற்று எச்சரிக்கை! ஆகஸ்ட் 5 வரை மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்!
நெல்லை நாலுமுக்கில் 29 செ.மீ. மழை பதிவாகியுள்ள நிலையில், கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் மிக கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகக் கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் நிலவும் பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை காரணமாக, கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப் பகுதிகள், நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய மிகக் கனமழை பெய்யக்கூடும் எனச் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது குறித்துத் தென் மண்டல வானிலை ஆய்வு மைய விஞ்ஞானி முனைவர் வி.ஆர்.துரை வெளியிட்டுள்ள தினசரி வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஒருசில இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாகத் திருநெல்வேலி மாவட்டம் நாலுமுக்கில் 29.4 சென்டிமீட்டர் (294.0 மி.மீ) மாபெரும் மழை கொட்டித் தீர்த்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக ஊத்து பகுதியில் 27 செ.மீ, காக்காச்சியில் 19 செ.மீ, காளிகேசத்தில் 14 செ.மீ மழை பதிவாகியுள்ளது. சமவெளிப் பகுதிகளில் மதுரை விமான நிலையத்தில் அதிகபட்சமாக 40.4° செல்சியஸ் வெப்பநிலையும், உதகமண்டலம் மலைப் பகுதியில் குறைந்தபட்சமாக 12.5° செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகியுள்ளது.
இன்று (01-08-2026): கோவை மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் பலத்த காற்றுடன் கூடிய கன முதல் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. திருப்பூர் மலைப் பகுதிகள் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும். மேலும் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு மற்றும் புதுவையில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதையும் படிங்க: நீலகிரி, கோவை உட்பட 5 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை... வானிலை மையம் அறிவிப்பு!
02-08-2026 மற்றும் 03-08-2026 மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோரத் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 04-08-2026 முதல் 07-08-2026 வரை மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், ஏனைய தமிழகத்தில் லேசான மழையும் பெய்யக்கூடும்.
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்.
தென்தமிழகக் கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல், தெற்கு வங்கக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கி.மீ வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ வேகத்திலும் பலத்த சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால், ஆகஸ்ட் 5-ஆம் தேதி வரை மீனவர்கள் இப்பகுதிகளுக்குக் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இதையும் படிங்க: நீலகிரி, கோவை, தேனி மக்களே உஷார்! ஜூலை 30 முதல் கனமழை எச்சரிக்கை!