துணைவேந்தர் நியமனம் குறித்து முதல்வர் விஜய் விரைவில் அறிவிப்பார்: அமைச்சர் விஸ்வநாதன் அதிரடி!
துணைவேந்தர் நியமனங்கள் குறித்து முதல்வர் விஜய் விரைவில் அறிவிப்பார் என்றும், 6000 உதவி பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் உயர்கல்வி அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள மாநிலப் பல்கலைக்கழகங்களில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் துணைவேந்தர் நியமனச் சிக்கல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ஆளுநருடனான பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் மிக விரைவில் துணைவேந்தர் நியமனங்கள் குறித்த மிக முக்கிய அறிவிப்பை மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் வெளியிடவுள்ளார் என்றும், கல்லூரிகளில் பேராசிரியர் காலிப் பணியிடங்களே இல்லை என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க நிலையைத் தவெக அரசு நிச்சயம் ஏற்படுத்தும் என்றும் தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் விஸ்வநாதன் ஆணித்தரமாகத் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டம் காட்பாடியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன், பல்கலைக்கழகங்களின் கட்டமைப்பு, உதவிப் பேராசிரியர் நியமனங்கள் மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை குறித்து அடுக்கடுக்கான விளக்கங்களை அளித்தார். அப்போது பேசிய அவர், "கடந்த 4 ஆண்டுகாலமாகவே பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பதில் பெருத்த காலதாமதமும் சட்டச் சிக்கல்களும் நிலவி வந்தன. முன்னாள் ஆளுநர் ஆர்.என். ரவி மற்றும் முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆகியோரது காலகட்டத்திலிருந்து சுமார் நான்கரை ஆண்டுகளாகத் தொடர்ந்த இந்த இழுபறி காரணமாக, அண்மையில் மனோன்மணியம் சுந்தரனார் மற்றும் அழகப்பா பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் பதவிக்காலமும் முடிவடைந்து காலியாகியுள்ளது. தற்போது மொத்தமுள்ள 13 பல்கலைக்கழகங்களில் அன்னை தெரசா பல்கலைக்கழகத்தில் மட்டுமே துணைவேந்தர் உள்ளார்; அந்தப் பதவியும் வரும் 2027 ஜனவரியில் முடிவடைகிறது. இச்சிக்கலைத் தீர்க்க முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் அரசு, தற்போதைய ஆளுநர் விஸ்வநாத் அர்ளேக்கர் அவர்களுடன் தொடர் ஆக்கப்பூர்வ பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது. வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் இருந்தாலும், துணைவேந்தர் நியமனங்கள் பற்றிய ஒரு மிகச் சிறந்த நல்ல செய்தியை விரைவில் நமது முதலமைச்சர் பொதுவெளியில் வெளியிடுவார்" என்று தெரிவித்தார்.
பல்கலைக்கழகங்களின் கட்டமைப்பு மற்றும் பேராசிரியர் காலிப் பணியிடங்கள் குறித்துப் பேசிய அமைச்சர், "உயர்கல்வித் துறையின் மானியக் கோரிக்கையில் பெருந்தலைவர் காமராஜர் பெயரில் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் ஆய்வகங்கள், நூலகங்கள், உணவகங்கள், சுற்றுச்சுவர் உள்ளிட்ட அடிப்படைக் கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது; திருவள்ளுவர் பல்கலைக்கழக விளையாட்டு மைதானக் கோரிக்கையும் இதன் மூலம் உடனடியாக நிறைவேற்றப்படும். மேலும், மாநிலத்தில் உள்ள 9,000 உதவிப் பேராசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்பும் பணியில் அரசு போர்க்கால அடிப்படையில் இறங்கியுள்ளது. ஏற்கனவே ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) நடத்திய தேர்வில் வெற்றி பெற்ற 24,000 பேருக்கு நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு முடிவடைந்து, முதற்கட்டமாக 2,700-க்கும் மேற்பட்டோருக்குப் பணி நியமன ஆணைகள் மிக விரைவில் வழங்கப்பட உள்ளன. இதனைத் தொடர்ந்து மேலும் 6,000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதால், அதற்கான புதிய டிஆர்பி தேர்வும் விரைவில் அறிவிக்கப்படும். தமிழ்நாட்டுக் கல்லூரிகளில் பேராசிரியர் காலிப் பணியிடமே இல்லை என்ற புரட்சிகர சூழலை உருவாக்குவோம்" என்று திட்டவட்டமாகக் கூறினார்.
இதையும் படிங்க: "தாய்மாமன் தங்க மோதிர திட்டம்"..! செப்.28 ல் தொடங்கி வைக்கும் முதல்வர் விஜய்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்னுரிமை மறுக்கப்படுவது தொடர்பான செய்தியாளர்களின் கேள்விக்கு உணர்ச்சிபொங்கப் பதிலளித்த அவர், "மத்திய அரசின் பிரதிநிதிகள் பங்கேற்கும் விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்தைப் பின்னுக்குத் தள்ளும் நிலைப்பாட்டை அவர்கள் எடுக்கிறார்கள். ஆனால், அரசு மேடைகளில் முதல் பாடலாகத் தமிழ்த்தாய் வாழ்த்துதான் இசைக்கப்பட வேண்டும் எனத் தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் தனித் தீர்மானமே நிறைவேற்றியுள்ளார். இதில் சமரசத்திற்கே இடமில்லை; அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்தே முதலாவதாகப் பாடப்படும். அண்மையில் துணை ஜனாதிபதி அவர்கள் வருகை தந்தபோது, இந்திய வரலாற்றிலேயே முதல்முறையாக ஒரு தமிழர் துணை ஜனாதிபதியாகத் தமிழ்நாட்டிற்கு வந்ததால், அரசுப் பிரதிநிதியாக அவருடன் ஒரே ஹெலிகாப்டரில் நான் பயணித்து அவரை முறைப்படி வரவேற்றேன். ஆனால், சாஸ்தா பல்கலைக்கழகம் மற்றும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டதால், நான் ஒரு தன்மானத் தமிழன் என்ற முறையில் அந்த மேடைகளில் அமராமல் முற்றிலுமாகப் புறக்கணித்தேன்" என்று ஆவேசமாகப் பதிவு செய்தார்.
இறுதியாக, வெளிநாட்டுப் படிப்புக்கான மாணவர் பாரதிதாசன் விவகாரம் மற்றும் முதலமைச்சரின் லண்டன் பயணம் குறித்துப் பேசிய அமைச்சர், "அந்த மாணவன் தமிழ்நாட்டைச் சேர்ந்த நமது சொந்தச் சகோதரன். அந்த மாணவனின் உயர்கல்விக் கனவை நிறைவேற்றுவதற்கான முழு தார்மீக உரிமையும் கடமையும் நமது அரசுக்கு இருக்கிறது; அவரது எண்ணத்தை முதலமைச்சர் விஜய் அரசு நிச்சயமாக முழுமையாகப் பூர்த்தி செய்யும். ஆனால், இந்த விவகாரத்தை வைத்து எதிர்க்கட்சிகள் அரசியல் சித்து விளையாட்டுகளைத் தொடங்கியிருப்பது நகைப்பைத் தருகிறது. அதேபோல், முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணம் ஊழல் அற்ற, தூய்மையான மக்கள் ஆட்சிக்கான புதிய தொழில் முதலீடுகளையும், பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளையும் தமிழகத்திற்குக் கொண்டு வருவதற்கான வரலாற்றுப் பயணமாகும்" என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: லண்டன் சென்றடைந்தார் முதலமைச்சர் விஜய்: புகழ்பெற்ற ஷாங்ரி-லா தி ஷார்ட் விடுதியில் உயர்மட்ட குழு முகாம்!