குடும்பப் பள்ளிகளில் இந்தி, அரசுப் பள்ளிகளில் எதிர்ப்பு! திமுகவை விளாசிய தமிழிசை சௌந்தரராஜன்!
அரசுப் பள்ளிகளில் இந்தியை எதிர்த்துவிட்டு, திமுகவினர் நடத்தும் தனியார் பள்ளிகளில் மும்மொழிக் கொள்கையைப் பின்பற்றுவது அவர்களின் இரட்டை வேடத்தைக் காட்டுகிறது என தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார்.
தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு சென்னை திருவல்லிக்கேணியில் பாஜக சார்பில் இன்று நடைபெற்ற ‘முதல்முறை வாக்காளர்கள் சந்திப்பு’ கூட்டத்தில் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநில முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பங்கேற்றுச் சிறப்புரையாற்றினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், திமுகவின் மொழி அரசியல் முதல் 2026 தேர்தல் கூட்டணி வரை பல்வேறு விவகாரங்கள் குறித்து அதிரடியான கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.
திமுகவின் மொழி அரசியலும் காங்கிரஸும்: இன்று மொழிப்போர் தியாகிகள் தினம் கடைபிடிக்கப்படுவதைச் சுட்டிக்காட்டிய தமிழிசை, "திமுக ஆட்சிக்கு வரக் காரணமாக இருந்த மொழிப்போர் தியாகிகளின் குடும்பங்களை இன்று அரசு கண்டுகொள்ளவில்லை. அன்று தியாகிகளைச் சுட்டுக்கொன்ற அதே காங்கிரஸுடன் இன்று முதல்வர் ஸ்டாலின் கைகோர்த்துக்கொண்டு தியாகிகள் தினம் கொண்டாடுவது வேடிக்கையாக உள்ளது" என விமர்சித்தார். மேலும், "இந்திக்கு இடமில்லை என்று கூறும் திமுகவினரின் குடும்பப் பள்ளிகளில் மட்டும் மும்மொழிக் கொள்கை பின்பற்றப்படுவது ஏன்? அரசுப் பள்ளிக்கு ஒரு நீதி, தனியார் பள்ளிக்கு ஒரு நீதி என திமுக இரட்டை வேடம் போடுகிறது" என்று சாடினார்.
விஜய்க்கு அட்வைஸ் மற்றும் கூட்டணி அழைப்பு: நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்துப் பேசிய அவர், "தம்பி விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன். ஆனால், தனியாக நின்று எதையும் சாதிப்பது கடினம். ஊழல் மிகுந்த 'தீய சக்தியான' திமுகவை எதிர்க்க ஒரு வலுவான கூட்டணி அவசியம். ஊழலற்ற ஆட்சியைத் தந்த பிரதமர் மோடியை விஜய் முதலில் பாராட்ட வேண்டும். 11 ஆண்டுகால மோடி ஆட்சியில் ஒரு சிறு ஊழல் புகார் கூட இல்லை; 50 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: எங்கள் கூட்டணியில் இன்னும் சில கட்சிகள் இணையும்! 210 இடங்களில் வெல்வோம் என இபிஎஸ் சபதம்!
எடப்பாடி தான் முதல்வர் வேட்பாளர்: 2026 தேர்தல் குறித்துப் பேசிய தமிழிசை, "எடப்பாடி பழனிசாமியைத் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக உள்துறை அமைச்சர் அமித் ஷா ஏற்கனவே அறிவித்துவிட்டார். அவர் ஒருமுறை சொன்னால் ஆயிரம் முறை சொன்னதற்குச் சமம்; அதை மீண்டும் மீண்டும் சொல்லத் தேவையில்லை. அதிமுக தலைமையிலான இந்த வலுவான கூட்டணி தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சியை ஏற்படுத்தும்" என உறுதிபடத் தெரிவித்தார். மேலும், திருமாவளவன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் திமுகவிடம் அடிமைப்பட்டுக் கிடப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
இதையும் படிங்க: “விஜயை மிரட்டுகிறது பாஜக!” - சென்னை விமான நிலையத்தில் தொல். திருமாவளவன் அதிரடி!