கோவிலுக்கு சொந்தமான ரூ.100 கோடி சொத்துக்கள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்பு... அறநிலையத்துறை துரித நடவடிக்கை...!
உக்கடம், அருள்மிகு வரசித்தி விநாயகர் திருக்கோயிலுக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான சொத்துகள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டதாக இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.
முதலமைச்சர் ஸ்டாலின் வழிகாட்டுதல்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்கள் அறிவுறுத்தலின்படியும், இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களுக்குச் சொந்தமான சொத்துக்கள் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கோயம்புத்தூர் மாவட்டம், உக்கடம், அருள்மிகு வரசித்தி விநாயகர் திருக்கோயிலுக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான சொத்துகள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டு திருக்கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.
கோயம்புத்தூர் மாவட்டம், உக்கடம், ஒப்பணக்கார வீதியில் அமைந்துள்ள அருள்மிகு இலட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயிலின் உபகோயிலான அருள்மிகு வரசித்தி விநாயகர் திருக்கோயிலுக்குச் சொந்தமான 80 சென்ட் நிலத்தில் 4 குடியிருப்புகள் மற்றும் 18 வணிக கடைகளை அமைத்து ஆக்கிரமிப்பு செய்திருந்தனர். திருக்கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்திருந்தவர்களை வெளியேற்றிட கோவை மண்டல இணை ஆணையர் அவர்களால் 2015 ஆம் ஆண்டில் சட்டப்பிரிவு 78-ன்படி ஆக்கிரமிப்பினை அகற்ற உத்தரவிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை சட்டப்பிரிவு 78 மற்றும் 79-ன் கீழ் தொடரப்பட்ட வழக்கு மற்றும் உயர்நீதிமன்ற பேராணை உத்தரவுகளின்படி, கோவை மண்டல இணை ஆணையர் ரமேஷ் உத்தரவின்படி, காவல்துறை உதவியுடன் திருக்கோயிலுக்கு சொந்தமான 80 சென்ட் நிலம் ஆக்கிரமிப்பிலிருந்து அகற்றப்பட்டு திருக்கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டது. இதன் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.100 கோடி எனக் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மேகதாது அணைக்கு அனுமதியா? வாய்ப்பே இல்ல... திட்டவட்டமாக மறுக்கும் அமைச்சர் துரைமுருகன்…!
இதுவரை இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகக் கட்டுப்பாட்டிலுள்ள 1,063 திருக்கோயில்களுக்கு சொந்தமான ரூ. 8,230.55 கோடி மதிப்பிலான 8,024.43 ஏக்கர் திருக்கோயில் சொத்துகள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டு உள்ளதாகவும் குறிப்பிட்டு உள்ளது.
இதையும் படிங்க: திமுக + தவெக ஷாக்...!! - அதிமுகவில் இணைந்த செங்கோட்டையன் அண்ணன் மகன்... அறிவாலயம் கோட்டையிலேயே ஓட்டையைப் போட்ட இபிஎஸ்...!