×
 

ஓசூர் விமான நிலையக் கனவு தவிடுபொடி! ஏன் இந்த முடிவை எடுத்தோம்? - மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை விளக்கம்!

ஓசூரில் உள்ள விமான நிலையத்தை, மத்திய அரசின் இணைப்புத் திட்டமான UDAN திட்டத்தின் கீழ் இணைக்க வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கை, மத்திய அரசால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் முக்கியத் தொழில் நகரமான ஓசூரில் உள்ள விமான நிலையத்தை, மத்திய அரசின்  பிராந்திய இணைப்புத் திட்டமான, UDAN திட்டத்தின் கீழ் இணைக்க வேண்டும் என்ற நீண்ட நாள் அரசியல் மற்றும் தொழில் கோரிக்கை, மத்திய அரசால் திட்டவட்டமாக நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு, பெங்களூருவின் கெம்பகவுடா சர்வதேச விமான நிலையத்துடன் போடப்பட்ட 150 கி.மீ தூரக் கட்டுப்பாட்டு ஒப்பந்தமே காரணம் என்று விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் முரளிதர் மொஹோல் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.

UDAN திட்டத்தின் கீழ் உள்ள ஒழுங்குமுறை விதியின்படி, செயல்படும் ஒரு விமான நிலையத்தின் 150 கி.மீ. சுற்றளவுக்குள் மற்றொரு விமான நிலையத்தை இணைக்க முடியாது. ஆனால், ஓசூர் விமான நிலையம் பெங்களூருவின் விமான நிலையத்திலிருந்து வெறும் 35 கி.மீ. தொலைவிலேயே அமைந்துள்ளது. இந்தக் சட்ட சிக்கல் காரணமாகவே, ஓசூர் விமான நிலையத்தை UDAN திட்டத்தில் சேர்க்க இயலாது என்று மத்திய இணையமைச்சர் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் உறுதிப்படுத்தியுள்ளார். இதனால், உள்நாட்டு விமானப் போக்குவரத்துச் சேவையை விரிவுபடுத்தும் வகையிலான உதான் திட்டத்தின் பட்டியலிலிருந்து ஓசூர் நீக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவல் தமிழகத் தொழில் துறையினர் மற்றும் பொதுமக்களுக்குப் பெரும் ஏமாற்றம் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.

ஓசூர் ஒரு முக்கிய தொழில் மையமாக விளங்குவதால், இங்கிருந்து சென்னை, கோவை மற்றும் பிற பெருநகரங்களுக்கு விமானச் சேவையைத் தொடங்க வேண்டும் என்று தமிழக அரசு மற்றும் தொழில் நிறுவனங்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வந்தன. தற்போது UDAN திட்டம் நிராகரிக்கப்பட்டதால், ஓசூர் விமான நிலையத்தை வணிக ரீதியிலான செயல்பாடுகளுக்குப் பயன்படுத்தத் தமிழக அரசு மாற்று வழிகளைக் கையாள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு, கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகில் பேரிகை – பாகலூர் பகுதியில் சர்வதேச விமான நிலையம் அமைக்கத் திட்டமிட்டுள்ள நிலையில்,  மத்திய அரசின் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

இதையும் படிங்க: இந்தியா யாருக்குச் சொந்தம்? சட்டவிரோதக் குடியேறிகள் உரிமைக் கோர முடியாது - உச்ச நீதிமன்றம் அதிரடி!

இந்திய விமான நிலைய ஆணையத்தின் நேரடி கள ஆய்வு உள்ளிட்ட அடுத்தடுத்த முடிவுகளில், தமிழக அரசு மும்முரமாக உள்ளபோதிலும், பெங்களூரு ஏர்போர்ட்டின் 150 கி.மீ ஒப்பந்தம் (2033 ஆம் ஆண்டு வரை நீடிக்கும் சிக்கல்) காரணமாக ஓசூரில் புதிய விமான நிலையம் அமைவது சட்டப்பூர்வமாகச் சாத்தியமில்லை என்ற நிலை உருவாகியுள்ளது.

இதற்கிடையில், ₹84.9 கோடி மதிப்பீட்டில் வேலூர், நெய்வேலி விமான நிலையங்களை உதான் திட்டத்தின் கீழ் லைசென்ஸ் பெறுவதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். மாநில தொழில் மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் ஓசூர் விமான நிலையத் திட்டத்திற்கான ஆலோசகர்களைத் தேர்வு செய்ய டெண்டர் கோரப்பட்டுள்ள சூழலில், டெல்லியிலிருந்து வந்த இந்த அறிவிப்பால் அடுத்த கட்டமாக இந்தத் திட்டத்தைத் தமிழக அரசு  எவ்வாறு செயல்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: பங்குச் சந்தை கட்டுப்பாடுகளில் பெரிய மாற்றம்? SEBI தலைவர் துஹின் காந்தா பாண்டே தகவல்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share