இம்மானுவேல் சேகரன் நினைவு தினம்... பாதுகாப்பு வளையத்திற்குள் பரமக்குடி...!
இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு போலீஸ் பாதுகாப்பு வளையத்திற்குள் பரமக்குடி கொண்டுவரப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் செப்டம்பர் 11 ஆம் தேதி ( நாளை) இம்மானுவேல் சேகரனின் 68 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட உள்ளது. தமிழக அரசு சார்பில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அரசியல் கட்சி பிரமுகர்கள் மரியாதை செலுத்த உள்ளனர். இம்மானுவேல் சேகரன் நினைவு தினம் மற்றும் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
காவல்துறை சட்ட ஒழுங்கு ADGP டேவிட்சன் ஆசீர்வாதம் தலைமையில் ஒரு ஐஜி, நான்கு டிஐஜிக்கள், 26 எஸ்பிக்கள், 42 ஏடிஎஸ்பிக்கள், 80 டிஎஸ்பிகள் உள்ளிட்ட 7435 காவலர்கள் பரமக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பரமக்குடி நகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 500 நவீன சிசிடிவி கேமராக்கள் மற்றும் டிரோன் கேமராக்கள் மூலமும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படக்கூடும் என்று கண்டறியப்பட்ட 161 பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் 137 பகுதிகள் பதற்றம் நிறைந்த பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வெள்ளத்தில் சிக்கி சின்னாபின்னமான பஞ்சாப்.. ரூ.1,600 கோடி நிவாரணம்.. பிரதமர் மோடி அறிவிப்பு..!!
மாவட்டம் முழுவதும் 52 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இம்மானுவேல் சேகரன் நினைவு நினைவிடம், பேருந்து நிலையம், ஐந்து முனை, சந்தை திடல் உள்ளிட்ட இடங்கள் 25 இடங்களில் 115 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தவிர மாவட்டம் முழுவதும் 67 இடங்களில் வீடியோ கேமரா மூலம் வாகனங்களில் வருபவர்கள், வாகனங்களில் இருப்பவர்கள் பதிவு செய்து கண்காணிக்கப்பட உள்ளனர். 45 பறக்கும் படை வாகனங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இம்மானுவேல் சேகரன் நினைவிடத்தில் நிரந்தர புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நினைவிடம் உள்பட சுற்று வட்டார பகுதிகளில் 5 ட்ரோன் கேமராக்கள் மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அஞ்சலி செலுத்த வருபவர்கள் மாவட்ட நிர்வாகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் மட்டுமே வந்து செல்ல வேண்டும்.
பரமக்குடி நகர் முழுவதும் டிரோன் கேமராக்கள் மூலம் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். சிசிடிவி கேமராக்கள், டிரோன் கேமராக்களில் பதிவாகும் காட்சிகள் தொழில்நுட்ப கட்டுப்பாட்டு அறை மூலம் கண்காணிக்கப்படுகிறது. இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு போலீசாரின் பாதுகாப்பு வளையத்திற்குள் பரமக்குடி நகர் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மீண்டும் ஓர் மெரினா புரட்சியா? தூய்மை பணியாளர்களை தேடித் தேடி கைது செய்யும் போலீஸ்…