நடுக்கடலில் கைவிடப்படும் கப்பல்கள்! இந்திய மாலுமிகளே அதிகம் பாதிக்கப்படுவதாக ஆய்வில் பகீர்!
உலகளவில் கைவிடப்படும் கப்பல்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதில் இந்திய மாலுமிகளே பெரிதும் பாதிக்கப்பட்டு வருவது தெரிய வந்துள்ளது.
உலகம் முழுவதும் கைவிடப்படும் கப்பல்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதில் இந்திய மாலுமிகளே அதிகம் பாதிக்கப்படுவது வேதனையளிக்கும் உண்மையாகியுள்ளது. கப்பல் உரிமையாளர்கள் நஷ்டம் அல்லது சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் போது, கப்பல்களை நடுக்கடலில் கைவிட்டு வெளியேறும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
லண்டனை மையமாகக் கொண்டு செயல்படும் சர்வதேச போக்குவரத்து தொழிலாளர்கள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த ஆண்டு மட்டும் உலகளவில் 410 கப்பல்கள் கைவிடப்பட்டுள்ளன. இதில் பயணித்த 6,223 மாலுமிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பட்டியலில் இந்திய மாலுமிகளே முதலிடத்தில் உள்ளனர். கடந்த ஆண்டு மட்டும் 1,125 இந்திய மாலுமிகள் கைவிடப்பட்டுள்ளனர். இது முந்தைய ஆண்டை விட 32 சதவீதம் அதிகமாகும்.
பிலிப்பைன்ஸ் மற்றும் சீனாவுக்குப் பின்னர் உலகுக்கு மிக அதிக மாலுமிகளை வழங்கும் மூன்றாவது நாடு இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இந்திய மாலுமிகள் தான் அதிகம் துன்பப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: காலையில் ஏவுகணை தாக்குதல்!! மாலையில் போர் நிறுத்தம்! இஸ்ரேல்- ஈரான் நடவடிக்கையால் மேற்காசியாவில் குழப்பம்!
சமீபத்திய சம்பவமாக, மங்கோலியக் கொடியுடன் சென்ற ‘அஸ்ரா சி’ என்ற சரக்குக் கப்பல் துருக்கியின் இஸ்தான்புல் அருகே கைவிடப்பட்டது. அதில் இருந்த 4 இந்திய மாலுமிகள் 10 மாதங்களுக்கு மேலாக பசியுடனும், அடிப்படை வசதிகள் இன்றியும் தவித்தனர். கப்பல் உரிமையாளர்கள் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டதால் மாலுமிகள் மீட்புக்கு நீண்ட காலம் ஆனது. இறுதியில் தீவிர முயற்சிக்குப் பிறகு அவர்கள் மீட்கப்பட்டனர்.
இத்தகைய சம்பவங்கள் தொடர்வதால், மத்திய அரசு மாலுமிகளை ஏமாற்றும் மற்றும் முறைகேடுகளில் ஈடுபடும் கப்பல் நிறுவனங்களை கருப்புப் பட்டியலில் சேர்த்து வருகிறது. இந்திய மாலுமிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன.
உலகளாவிய பொருளாதார நெருக்கடி மற்றும் சட்டவிரோத செயல்கள் அதிகரிப்பால் கப்பல்கள் கைவிடப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவது கடல் தொழிலில் ஈடுபடும் இந்திய இளைஞர்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அரசு மற்றும் சர்வதேச அமைப்புகள் இணைந்து மாலுமிகளின் உரிமைகளை பாதுகாக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அதிகரிக்கும் படை பலம்! 190 அணு ஆயுதம் கைவசம்!! ஆயுதங்கள் இறக்குமதியில் 2வது இடம்! கெத்து காட்டும் இந்தியா!