போலீசாரை கொன்ற ஈரான் போராட்டக்காரர்கள்! 3 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்!
ஈரானில் போராட்டத்தில் ஈடுபட்ட 3 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதற்கு சர்வதேச மனித உரிமை அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட மூன்று இளைஞர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ள சம்பவம் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் ஈரான் முழுவதும் அரசுக்கு எதிராக பெரும் போராட்டங்கள் வெடித்தன. போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்புப் படையினர் நடத்திய கடுமையான தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. பல ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.
அந்தக் கைதிகளில் 19 வயது மல்யுத்த வீரர் சலே முகமதி, சயீத் தவுதி மற்றும் மெஹ்தி காசெமி ஆகிய மூவரும் கோம் நகரில் நடந்த போராட்டத்தின்போது இரு போலீசாரைக் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு, தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருந்தனர். இந்த மூவருக்கும் தண்டனை நிறைவேற்றப்பட்டதாக ஈரான் அரசு ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
இதையும் படிங்க: தொகுதி பங்கீடு தீவிரம்..! சீக்கிரம் வந்து சேருங்க..! டெல்லிக்கு பறந்த TTV தினகரன், அன்புமணி..!
இந்தச் செயலுக்கு சர்வதேச மனித உரிமை அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. ஈரான் மனித உரிமைகள் அமைப்பின் இயக்குநர் மஹ்மூத் அமிரி மொகாதம் கூறுகையில், “அரசியல் எதிர்ப்பை ஒடுக்குவதற்காகவும், மக்களிடம் பயத்தைப் பரப்புவதற்காகவும் நடத்தப்பட்ட இந்தத் தூக்கு தண்டனைகளை நாங்கள் கொலைகளாகவே கருதுகிறோம். ஈரான் ஆட்சியாளர்கள் தங்களது பிழைப்புக்காகப் போராடி வருகின்றனர். அடிப்படை மாற்றத்தைக் கோரும் மக்களையே தங்களுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக பார்க்கிறார்கள்” என்றார்.
மேலும், இனி கைது செய்யப்பட்டுள்ள மற்ற போராட்டக்காரர்களுக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. சர்வதேச சமூகம் உடனடியாக தலையிட்டு மேலும் உயிரிழப்புகளைத் தடுக்க வேண்டும் என்று மனித உரிமை அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.
ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்து வரும் நிலையில், இந்த மரண தண்டனைகள் நிலைமையை மேலும் மோசமாக்கும் என்று அஞ்சப்படுகிறது.
இதையும் படிங்க: நாதகவில் இருந்து விலகி தவெகவில் இணைய தயார்... விஜய்க்கு ஓபன் சவால் விட்ட சாட்டை துரைமுருகன்...!