நாதகவில் இருந்து விலகி தவெகவில் இணைய தயார்... விஜய்க்கு ஓபன் சவால் விட்ட சாட்டை துரைமுருகன்...!
நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி விஜய் கட்சியில் சேருகிறேன் என நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன் அறிவிப்பு
நடிகர் விஜய் மகளிர் உரிமைத் தொகையாக மாதம் 2500 ரூபாய், அண்ணன் சீர், மாமன் சீர் என அள்ளி தெளித்த திட்டங்களுக்கு எந்த வருவாய் அடிப்படையில் திட்டங்கள் வைத்திருக்கிறார் என்பதை நடிகர் விஜய் தெரிவித்தால் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி விஜய் கட்சியில் சேருகிறேன் என நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன் இன்று இரவு கும்பகோணத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சவால்.
நாம் தமிழர் கட்சியின் கும்பகோணம் சட்டமன்றத் தொகுதியின் வேட்பாளராக போட்டியிடும் வழக்கறிஞர் ஆனந்த் ன் அறிமுக கூட்டம் இன்று இரவு கும்பகோணத்தில் நடைபெற்றது .
இதில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன் கலந்து கொண்டார். சாட்டை துரைமுருகன் பேசும்போது, தமிழகத்தின் தற்போதைய கடன் பத்து லட்சம் கோடி ரூபாய். விஜய் பெண்களுக்கு மாதம் 2500 ரூபாய் தருவதாக அறிவித்துள்ளார். மூன்று கோடி பெண்கள் தமிழகத்தில் உள்ளனர். இது தவிர அண்ணன் சீர், மாமன் சீர் என அள்ளி தெளித்த பல திட்டங்களுக்கு எந்த வருவாய் மூலம் இதனை செயல்படுத்துவார் என விஜய் தெரிவித்தால், நான் - நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி விஜய் கட்சியில் சேர்ந்து விடுகிறேன்.
முதலில் உங்கள் திட்டத்தை கூறுங்கள், உங்கள் கொள்கையை கூறுங்கள், தனியார் மயமா? எல்லாமே அரசு மயமா? எதன் அடிப்படையில் விஜய் முதல்வர் ஆவேன் என்று கூறுகிறார் என்பது தெரியவில்லை. கற்பனை பண்ணிப் பாருங்கள் முதல்வர் விஜய், பொதுப்பணித்துறை அமைச்சர் புஸ்ஸி ஆனந்த், விளையாட்டுத்துறை அமைச்சர் லெப்ட் பாண்டி, கல்வித்துறை அமைச்சர் லயோலா மணி, நெடுஞ்சாலை துறை அமைச்சர் நாஞ்சில் சம்பத், இதனை கற்பனை பண்ணி பார்ப்பதே கண்றாவியாக உள்ளது.
இதையும் படிங்க: "3 மரம் நட்டு.. 1 மரம் வெட்டு"..! மண் முதல் மக்கள் வரை... சீமான் சொல்லும் புதிய சட்டம்..!!
சட்டசபையில் என் தலைவர் இரண்டு மனைவிகள் வைத்துக் கொள்வார், நான்கு மனைவிகள் வைத்துக் கொள்வார் யார்? கேள்வி கேட்பது என நாஞ்சில் சம்பத் பேசுவார். இதையெல்லாம் நினைத்துப் பார்க்க கூட முடியவில்லை.
234 தொகுதிகளிலும் தனித்து களம் காணும் நாங்கள் ஆட்சி அமைக்க வாய்ப்பு தாருங்கள் என சாட்டை துரைமுருகன் பேசினார். வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வழக்கறிஞர் ஆனந்த் மேடையில் அமர்ந்திருந்தார் .நீங்கள் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருவார் ஆனந்த் என்று சாட்டை துரைமுருகன் பேசும்போது ,நாற்காலியில் அமர்ந்திருந்த வேட்பாளர் ஆனந்தை பார்த்து இப்படி உட்கார்ந்து இருந்தால் யார் ? உங்களுக்கு ஓட்டு போடுவார்கள். கும்பிட வேண்டாமா? என செல்லமாக கடிந்து கொண்டார்.
வாக்காளர்களை சந்திக்க கும்பிட்ட கையோடு வருபவர்கள் ஏமாற்றுக்காரர்கள், உங்களுக்கு சேவை செய்ய வரும் நபர்களை பொதுமக்கள் தான் கும்பிட்டு வரவேற்க வேண்டும் என்றும், மக்களை ஏமாற்ற வேண்டும் என்றால் அவர்களது ஆசையை தூண்ட வேண்டும் என சினிமா பாணியில் சாட்டை துரைமுருகன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: #BREAKING: தமிழ்நாட்டுக்கு 5 தலைநகரம்.. அரசு வேலையில் பெண்களுக்கு சரி பாதி பங்கு..! தூள் கிளப்பிய சீமான் தேர்தல் அறிக்கை..!!