ஜெகத்ரட்சகன் மகனுக்கு தவெகவில் முக்கிய பதவி.. தூக்கி கொடுத்த விஜய்!! கவனம் ஈர்க்கும் நியமனம்!!
இவர் கணினி அறிவியல் மீதான ஆர்வத்தால் முதுகலைப் பட்டம், பின்னர் பிஎச்டி, எம்பிஏ மற்றும் சட்டப் படிப்புகளையும் முடித்துள்ளார்.
திமுக முன்னாள் அமைச்சர் ஜெகத்ரட்சகனின் மகன் சந்தீப் ஆனந்த், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்து கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் பதவியைப் பெற்றுள்ளார். இது வட தமிழக அரசியலில் புதிய அலைகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஜூலை 4ஆம் தேதி முதல்வர் விஜய் முன்னிலையில் சந்தீப் தவெகவில் இணைந்தார். அண்மையில் கட்சியில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்களான எம்.எஸ்.எம். ஆனந்தன், உடுமலை ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜூ, கே.வி. ராமலிங்கம், எம். ஆனந்தன், எம்.சி. சம்பத், பச்சைமால், வைகைச் செல்வன், வெல்லமண்டி நடராஜன், சிவபதி, எஸ். வளர்மதி ஆகியோருக்கு வழங்கப்பட்ட அதே துணைப் பொதுச் செயலாளர் பதவி அவருக்கும் அளிக்கப்பட்டுள்ளது.
சந்தீப் ஆனந்த் பன்முகத் திறமைகள் கொண்டவர். அக்கார்டு நிறுவனங்களின் மேலாண் இயக்குநராக ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் அளவிலான வணிகத்தை நடத்தி வருகிறார். பாரத் கல்விக் குழுமத்தின் தலைவராகவும் பணியாற்றுகிறார். அண்ணா பல்கலைக்கழகத்தில் இயந்திரப் பொறியியல் பட்டம் பெற்ற இவர், கணினி அறிவியல் மீதான ஆர்வத்தால் முதுகலைப் பட்டம், பின்னர் பிஎச்டி, எம்பிஏ மற்றும் சட்டப் படிப்புகளையும் முடித்துள்ளார்.
இதையும் படிங்க: மாணவர் பாரதிதாசனை நாங்களே படிக்க வைப்போம்: முதலமைச்சர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!
அமெரிக்காவின் நாசாவில் விஞ்ஞானியாகப் பணியாற்றும் கனவு கொண்டிருந்தார். சமூக சேவையிலும் அவர் முன்னிலை வகிக்கிறார். ஜார்ஜியாவிலிருந்து அகதியாக வந்த குடும்பத்தின் இதயப் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு இந்தியாவில் மூன்று மாதங்கள் சிகிச்சை அளித்து அனைத்துச் செலவுகளையும் ஏற்றுக்கொண்டார். குழந்தை இறந்தாலும், அவரது முயற்சிக்காக ஜார்ஜியா அதிபர் ‘ஆர்டர் ஆஃப் செயின்ட் நிக்கோலஸ்’ விருதை வழங்கினார்.
அரசியல் ஆர்வம் கொண்ட சந்தீப், தந்தையிடம் கூறியபோது வணிகத்தில் கவனம் செலுத்தும்படி அறிவுறுத்தப்பட்டார். ஆனால் மக்கள் சேவைக்காக விஜய் தலைமையிலான தவெகவில் இணைந்துள்ளார். வன்னியர் சமூகத்தில் அவரது செல்வாக்கு, வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பாமக ஆதிக்கத்தை முறியடித்து தவெகவுக்கு வாக்குகளைத் திருப்ப உதவும் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.
வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் அவருக்கு வாய்ப்பு கிடைக்குமா, தந்தையை எதிர்த்து அரசியல் செய்வாரா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. நாசா கனவு நனவாகாத நிலையில், அரசியலில் வெற்றி பெறுவாரா என்பதை காலம்தான் சொல்லும்.
இதையும் படிங்க: "மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு 100 மடங்கு உயர வேண்டும்": செங்கோட்டையனுக்கு முன்னாள் அமைச்சர் சு. முத்துசாமி பதில்!