×
 

"நாளைக்கு காலையில 10:30-க்கு தான் தீர்ப்பு!" ஜனநாயகன் ரிலீஸ் ஆகுமா? ஆகாதா? கோர்ட் சொல்லப்போகும் அந்த பதில்!

நடிகர் விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படத்திற்குத் தணிக்கைச் சான்றிதழ் வழங்கக் கோரித் தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் நாளை (ஜனவரி 9) காலை 10:30 மணிக்குத் தீர்ப்பளிக்க உள்ளது.

தமிழகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் படம், திட்டமிட்டபடி நாளை வெளியாக வேண்டிய சூழலில், இதுவரை தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படவில்லை. இதனை எதிர்த்துத் தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் புரொடக்ஷன்ஸ் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி பி.டி. ஆஷா, தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தார். இந்நிலையில், நாளை காலை நீதிமன்றம் வழங்கப்போகும் தீர்ப்பு, படத்தின் ரிலீஸ் தேதியை உறுதி செய்யும் என்பதால் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்த வழக்கின் முந்தைய விசாரணையின் போது, தணிக்கை வாரியம் (CBFC) தனது தரப்பு வாதத்தை முன்வைத்தது. "படத்தின் சில காட்சிகளுக்குத் தணிக்கைக் குழு உறுப்பினர் ஒருவர் கடும் ஆட்சேபனை தெரிவித்துப் புகார் அளித்துள்ளார்; எனவே படத்தைச் சட்ட விதிகளின்படி மறு தணிக்கை செய்ய எங்களுக்கு முழு அதிகாரம் உள்ளது" எனத் தெரிவித்தது. ஆனால், இதனைத் தயாரிப்பு நிறுவனம் வன்மையாக மறுத்தது. "தணிக்கைக் குழுவின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், ஒரே ஒரு நபரின் தனிப்பட்ட புகாருக்காகச் சான்றிதழை நிறுத்தி வைப்பது சட்டப்படி செல்லாது. சுமார் 500 கோடி ரூபாய் முதலீட்டில் உருவான இந்தப் படம் குறிப்பிட்ட தேதியில் வெளியாகாவிட்டால் மிகப்பெரிய நிதி இழப்பு ஏற்படும்" என வாதிட்டது.

இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதி, வழக்கின் முக்கியத்துவத்தைக் கருதி நாளை காலை தீர்ப்பளிக்க உள்ளதாக அறிவித்துள்ளார். ஏற்கனவே தணிக்கைச் சிக்கல் மற்றும் காலதாமதம் காரணமாக, நாளை (ஜனவரி 9) வெளியாகவிருந்த 'ஜனநாயகன்' திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியைத் தள்ளி வைப்பதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை நாளை நீதிமன்றம் சாதகமான தீர்ப்பு வழங்கினால், மிக விரைவில் தணிக்கைப் பணிகள் முடிக்கப்பட்டு, பொங்கல் விடுமுறைக்குள் படம் திரைக்கு வர வாய்ப்புள்ளது. இதனால் நாளை காலை 10:30 மணிக்குப் பிறகே தளபதி ரசிகர்களின் ‘ஜனநாயகன்’ கொண்டாட்டம் தொடங்குமா என்பது தெரியவரும்.

இதையும் படிங்க: ‘ஜனநாயகன்’ ரிலீஸ் ஒத்திவைப்பு! மாலிக் ஸ்ட்ரீம்ஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு - ரசிகர்கள் அதிர்ச்சி!


 

இதையும் படிங்க: விமான நிலையத்தில் தள்ளுமுள்ளு! தடுமாறி விழுந்த விஜய் - கட்டுக்கடங்காத கூட்டத்தால் பரபரப்பு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share