விமான நிலையத்தில் தள்ளுமுள்ளு! தடுமாறி விழுந்த விஜய் - கட்டுக்கடங்காத கூட்டத்தால் பரபரப்பு!
சென்னை விமான நிலையத்தில் ரசிகர்கள் கூட்டத்தில் ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நிலைதடுமாறி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மலேசியாவில் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழாவை வெற்றிகரமாக முடித்துவிட்டுத் தமிழகம் திரும்பிய தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய்க்கு, சென்னை விமான நிலையத்தில் ரசிகர்கள் கட்டுக்கடங்காத வரவேற்பு அளித்தனர். விமான நிலைய வாயிலில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ஒரே நேரத்தில் விஜய்யைப் பார்க்க முண்டியடித்ததால் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில், அவர் தனது காரில் ஏற முயன்ற போது சற்று நிலைத்தடுமாறிய சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.
மலேசியாவில் நேற்று நடைபெற்ற தனது ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற நடிகர் விஜய், இன்று இரவு சென்னை திரும்பினார். மலேசியாவில் அவர் ஆற்றிய அரசியல் கலந்த உரையின் தாக்கம் குறையும் முன்பே, அவரை வரவேற்கச் சென்னை விமான நிலையத்தில் பல்லாயிரக்கணக்கான தொண்டர்களும் ரசிகர்களும் மாலை முதலே காத்திருந்தனர். விஜய் விமான நிலையத்திலிருந்து வெளியே வந்தவுடன், அவரைக் காண்பதற்காக ரசிகர்கள் ஒரே நேரத்தில் அவரைச் சூழ்ந்து கொண்டனர்.
பாதுகாப்பு வளையத்தையும் மீறி ரசிகர்கள் முண்டியடித்ததால் அந்த இடமே போர்க்களம் போலக் காட்சியளித்தது. அப்போது தனது காரை நோக்கிச் சென்ற விஜய், ரசிகர்களின் தள்ளுமுள்ளு காரணமாகக் காரில் ஏறும்போது ஒரு நிமிடம் நிலைத்தடுமாறினார். இதனால் அங்கிருந்த பாதுகாவலர்கள் உடனடியாக அவரைத் தாங்கிப் பிடித்துப் பத்திரமாகக் காரின் உள்ளே அமர வைத்தனர். விஜய்யின் வருகையையொட்டிப் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என அவரது ஆதரவாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதையும் படிங்க: "வாக்குறுதி என்னாச்சு?" கொளுத்தும் வெயில்.. நடுரோட்டில் போராடிய ஆசிரியர்களை குண்டுக்கட்டாக தூக்கிய போலீஸ்!
நிலைத்தடுமாற்றத்திற்குப் பிறகு சுதாரித்துக் கொண்ட விஜய், காரின் உள்ளே இருந்தபடித் தனது ரசிகர்களைப் பார்த்து கையசைத்து விடைபெற்றார். விஜய்யைப் பார்ப்பதற்காகப் பல மணிநேரம் காத்திருந்த ரசிகர்கள், அவர் நிலைத்தடுமாறியதைக் கண்டு சற்று அதிர்ச்சியடைந்தனர். ‘ஜனநாயகன்’ படத்தின் ரிலீஸ் நெருங்கி வரும் வேளையில், விமான நிலையத்தில் ஏற்பட்ட இந்தத் தள்ளுமுள்ளு சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: பயணிகள் கவனத்திற்கு! நாளை மின்சார ரயில் சேவைகள் ரத்து! முழு விவரம் இதோ!