ஜெ. முடிவை விமர்சித்த கடம்பூர் ராஜுவை கட்சியிலிருந்து நீக்குங்க... முன்னாள் எம்.பி ஆவேசம்..!
பாஜக கூட்டணி விவகாரத்தில் ஜெயலலிதாவின் முடிவை விமர்சித்த கடம்பூர் ராஜுவை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்று முன்னாள் எம்.பி கே.சி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
1998 ஆம் ஆண்டு பாஜக ஆட்சியை கவிழ்க்க ஜெயலலிதா எடுத்த முடிவு வரலாற்று பிழை என கடம்பூர் ராஜு பேசியது சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.
கோவில்பட்டியில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு கலந்து கொண்டார். அப்போது மேடையில் பேசிய அவர், பாஜகவை புகழ்வதாக நினைத்து ஜெயலலிதாவின் முடிவை விமர்சித்ததால் கடும் சர்ச்சை நிலவியது.
பாஜக கூட்டணி முறிவு என்ற வரலாற்றுப் பிழையை செய்து விட்டோம் என்றும் 1998 இல் பாஜக ஆட்சியை கவிழ்க்க ஜெயலலிதா எடுத்த முடிவு வரலாற்றுப் பிழை எனவும் அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பேசியதால் சர்ச்சை எழுந்துள்ளது.
இதையும் படிங்க: தனிக்கட்சி... தவெகவுடன் கூட்டணி... ஓபிஎஸ் பரபரப்பு பிரஸ்மீட்!
திமுக தமிழகத்தில் வளர பாஜக தான் காரணம் என்றும் கடம்பூர் ராஜு தெரிவித்திருந்தார். இந்த நிலையில் பாஜக திமுக கூட்டணி குறித்த கடம்பூர் ராஜுவின் பேச்சு கோமாளி கூத்து என திமுக கண்டனம் தெரிவித்துள்ளது.
பாஜகவின் கொள்கையை திமுக ஒரு போதும் பின்பற்றியதில்லை என்றும் திமுகவின் செய்தி தொடர்பாளர் கான்ஸ்டன்ட்டைன் பதிலடி கொடுத்துள்ளார். பாஜகவால் தான் திமுக வளர்ந்தது என்ற கடம்பூர் ராஜு மனநிலையை தான் பரிசோதிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்
இதனிடையே ஜெயலலிதாவின் முடிவை விமர்சித்த கடம்பூர் ராஜுவை அதிமுகவிலிருந்து நீக்க வேண்டும் என்று அதிமுக முன்னாள் எம்பி கே சி பழனிசாமி தெரிவித்துள்ளார். வழக்குகளில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்வதற்காகவே முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு இப்படி பேசுகிறார் என்றும் விமர்சித்தார்.
பாஜகவுடன் கூட்டணி வைத்து செய்த தவறுக்கு பரிகாரமாகவே ஆட்சியை கவிழ்த்தேன் என பேசியவர் ஜெயலலிதா என்றும் குறிப்பிட்டார். இதுபோல பேசுவதற்கு பதில் கடம்பூர் ராஜூ போன்றவர்கள் பாஜகவில் இணைந்து ஹிந்துத்துவா பணியை செய்யலாம் என்றும் கடுமையாக சாடினார்.
இதையும் படிங்க: கீழடியை வெச்சு அரசியல் பண்றாங்க.. PERMISSION வாங்க வேண்டியது திமுக அரசு கடமை - இபிஎஸ்..!