தமிழகத்தில் பூரண மதுவிலக்கு..? கள் இறக்க அனுமதிக்கலாம்... நீதிபதி கோகுல்தாஸ் ஆணையத்தின் முக்கிய பரிந்துரை!
கள் இறக்க அனுமதிக்கலாம் என கோகுல் தாஸ் ஆணையம் தெரிவித்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடந்த கள்ளச்சாராய விபத்து தமிழகம் முழுவதையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மெத்தனால் கலந்த விஷச்சாராயத்தை அருந்தியதால் அறுபதுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர். பெரும்பாலும் தினக்கூலி மற்றும் சமூகப் பொருளாதார ரீதியில் பின்தங்கிய பிரிவினரே இந்த சோகத்திற்கு ஆளாயினர். சம்பவம் வெளியான உடன் அரசு நிவாரணம் அறிவித்ததுடன், ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை அமைத்தது.
ஆணையம் கள ஆய்வு, சாட்சியங்கள் மற்றும் தொடர்புடைய அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்து அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. அந்த அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.ஆணையம் சம்பவத்தின் பின்னணியை விரிவாக ஆய்வு செய்தது. மெத்தனால் சென்னையிலிருந்து கள்ளக்குறிச்சிக்கு கொண்டுவரப்பட்டு கள்ளச்சாராய தயாரிப்பில் பயன்படுத்தப்பட்டது. இதைக் கண்காணிக்க வேண்டிய மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்த் துறை அலுவலர்களின் கவனக்குறைவே இந்த சோகத்திற்கு முக்கிய காரணம் என்று ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது.
கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், காஞ்சிராபாளையம் பகுதிகளில் உள்ள காவல் நிலைய அதிகாரிகள், தடை அமலாக்கப் பிரிவு அதிகாரிகள், கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்டோர் பொறுப்பை தவறியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்கள் மீது துறைசார் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை ஆணையம் பரிந்துரைத்துள்ளது. அடுத்த தலைமுறையின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தலாம் என்று ஆணையம் கூறியுள்ளது. அது சாத்தியமில்லை என்றால் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்த அரசு பரிசீலிக்கலாம். கள் இறக்கி விற்க உரிமம் வழங்குவதும், அதற்கு ஏற்ற வரி விதிப்பதும் கருத்தில் கொள்ளப்படலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.டாஸ்மாக் விற்பனையைப் பொறுத்தவரை, இந்திய தயாரிப்பு வெளிநாட்டு மதுபான வகைகளின் விலையை ஐம்பது சதவீதம் குறைக்கலாம் என்று ஆணையம் பரிந்துரைத்துள்ளது. விலை குறைப்புக்காக மதுபானங்களை டெட்ரா பேக்கில் அடைத்து விற்கும் முறையை அரசு பரிசீலிக்கலாம்.
இதையும் படிங்க: 5 தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் தடை நீட்டிப்பு..! நெருங்கியது இறுதி விசாரணை... பெரும் எதிர்பார்ப்பு..!!
டாஸ்மாக் கடைகளின் வணிக நேரத்தையும் மாற்றலாம். காலை ஒன்பது மணி முதல் மதியம் ஒரு மணி வரையும், மாலை ஐந்து மணி முதல் இரவு ஒன்பது மணி வரையும் என நேரத்தை மறுசீரமைக்கலாம். ஒரு நாளில் ஒருவருக்கான மதுபான விற்பனை அளவைக் கட்டுப்படுத்த விநியோக அட்டைகளை வழங்கும் முறையையும் ஆணையம் பரிசீலிக்கலாம் என்று தெரிவித்துள்ளது.ஆணையம் மேலும் சில சமூக நலப் பரிந்துரைகளையும் வழங்கியுள்ளது. சம்பவத்தால் அனாதைகளான குழந்தைகளுக்கு கல்வி, உணவு, தங்குமிடம் ஆகியவற்றை அரசு உறுதி செய்ய வேண்டும். அவர்கள் கல்வி முடித்த பிறகு அரசு வேலை வாய்ப்பு அளிக்கலாம். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொழிற்சாலைகள் அமைத்து கல்வி கற்ற இளைஞர்களுக்கும் திறன் பெற்றவர்களுக்கும் வேலைவாய்ப்பு உருவாக்க வேண்டும்.
கள்ளச்சாராயத்தின் முக்கிய மூலமாக விளங்கும் கல்வராயன் மலைப்பகுதிக்கு தனியாக தடை அமலாக்கப் பிரிவை உருவாக்கலாம் என்றும் காரியலூர் காவல் நிலையத்தை மேம்படுத்தலாம் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.இந்த அறிக்கை கள்ளச்சாராய விபத்தின் மூல காரணங்களை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளதுடன், மது தொடர்பான கொள்கைகளில் நீண்டகால மாற்றங்களையும் பரிந்துரைத்துள்ளது. மக்களின் உயிர் பாதுகாப்பு, சமூக நலம் மற்றும் அடுத்த தலைமுறையின் எதிர்காலம் ஆகியவற்றை முன்னிறுத்தி அரசு இந்தப் பரிந்துரைகளை ஆய்வு செய்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: மக்களுக்கு உபயோகமில்லாத சட்டசபை.. நீதிமன்ற வழக்குகளைப் பேசிய முதல்வர்: பிரேமலதா காட்டம்!