கள் போதைப் பொருளா.? நிரூபித்தால் இன்னோவா கார்... நல்லசாமி சவால்..!!
கள் போதைப் பொருள் என நிரூபித்தால் இன்னோவா கார் பரிசு என நல்லசாமி சவால் விடுத்தார்.
தமிழ்நாட்டில் கள் இறக்கும் மற்றும் விற்பனை செய்வதற்கு நீண்ட காலமாக இருந்து வரும் தடை குறித்து மீண்டும் விவாதங்கள் எழுந்துள்ளன. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நிகழ்ந்த கள்ளச்சாராய விஷ நிகழ்வில் சுமார் 70 பேர் உயிரிழந்ததையும், பலர் நிரந்தர ஊனமுற்றதையும் தொடர்ந்து அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி பி. கோகுல்தாஸ் தலைமையிலான விசாரணை ஆணையம் தனது இறுதி அறிக்கையை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தது.
இந்த அறிக்கையில், அந்த சோக நிகழ்வுக்கு காரணமாக அதிகாரிகளின் அலட்சியம், கடமை தவறுதல் மற்றும் கள்ளச்சாராய வியாபாரிகளுடன் சில அதிகாரிகளுக்கு இருந்த தொடர்பு ஆகியவை சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. அதேநேரம், எதிர்காலத்தில் இதுபோன்ற துயரங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க பல்வேறு பரிந்துரைகளையும் ஆணையம் வழங்கியுள்ளது.அந்தப் பரிந்துரைகளில் ஒன்று கள் தொடர்பானது. கள் இறக்குவதற்கும் விற்பனை செய்வதற்கும் உரிமம் வழங்கி, முறையான கட்டுப்பாடுகளுடன் அனுமதிப்பதை அரசு பரிசீலிக்கலாம் என ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
இயற்கையான கள் கிடைக்கும்போது மக்கள் கள்ளச்சாராயத்தை நாடாமல் இருக்கலாம் என்றும், அதன் மூலம் கள்ளச்சாராய விற்பனையை கட்டுப்படுத்த முடியும் என்றும் ஆணையம் கருத்து தெரிவித்துள்ளதாக தெரிகிறது. மேலும், படிப்படியான மதுவிலக்கு, மெத்தனால் கட்டுப்பாடு, கள்வாராயன் மலைப் பகுதிகளில் தனி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு அமைத்தல் உள்ளிட்ட பிற நடவடிக்கைகளும் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இந்தப் பரிந்துரைகளைத் தொடர்ந்து, கள் தடையை நீக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் பல தரப்பிலிருந்தும் எழுந்துள்ளன. விவசாயிகள் மற்றும் பாரம்பரிய தொழில்களைச் சார்ந்தவர்கள் இதனை வரவேற்கின்றனர்.
இதையும் படிங்க: 8 நேரம் மின்வெட்டு... சாலையில் சீமைக்கருவேல மரங்களைப் போட்டு மக்கள் செய்த தரமான சம்பவம்...!
அரசு விரைவில் இதுகுறித்து முடிவெடுத்து அறிவிக்கும் என்ற நம்பிக்கை சில தரப்பினரிடையே உள்ளது.இதற்கு இணையாக, கள் தடை குறித்த விவாதத்தில் தமிழ்நாடு கள் இயக்கம் ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி ஒரு சவாலை விடுத்துள்ளார். களுக்கான தடை நியாயமானது என்று யாராவது சட்டப்பேரவையில் நிரூபித்தால், அவருக்கு இன்னோவா கார் பரிசாக வழங்கப்படும் என அவர் அறிவித்துள்ளார். கள் என்பது போதைப்பொருள் அல்ல, மாறாக பாரம்பரியமான இயற்கை உணவுப் பொருள் என்றும், அதன் மீதான தடை கிராமப்புற வாழ்வாதாரத்தை பாதிக்கிறது என்றும் அவர் வாதிடுகிறார்.
இதையும் படிங்க: பக்தர்களே கவனிங்க..!! மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம்... சிறப்பு ரயில்கள் இயக்க ஏற்பாடு..!!