பார்லிமென்டில் கால் பதிக்கும் கமல்.. பதவியேற்பு தேதியை உறுதி செய்த மநீம..!
வரும் 25 ஆம் தேதி மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் எம். பி.யாக பதவியேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வான ஆறு உறுப்பினர்களின் பதவி காலம் முடிவடைந்தது. மாநிலங்களவையில் உள்ள பாமகவின் அன்புமணி ராமதாஸ், திமுகவின் எம்.சண்முகம், முகமது அப்துல்லா, பி.வில்சன், அதிமுகவின் என்.சந்திரசேகரன், மதிமுகவின் வைகோ ஆகியோரின் பதவிக் காலம் ஜூன் 24ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இந்த நிலையில், ஜூன் 19ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.
ஜூன் ஒன்பதாம் தேதி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கும் நிலையில், திமுக சார்பில் போட்டியிடும் மாநிலங்களவை வேட்பாளர்களுக்கான பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு அளித்த வாக்குறுதியின் படி ஒரு சீட்டை திமுக அக்கட்சிக்கு ஒதுக்கியது. அதன்படி மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மாநிலங்களவை உறுப்பினராக இருப்பதாக கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டது.
இதனை அடுத்து திமுக வேட்பாளர்கள் மூன்று பேருடன், கமல்ஹாசனும் சேர்ந்து தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். மேலும், அ.தி.மு.க. சார்பில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் இன்பதுரை, செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அவைத் தலைவர் தனபால் ஆகியோர் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர். இவர்கள் தவிர்த்து ஏழு சுயேட்சை வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர். மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்ற நிலையில், திமுக மற்றும் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் மனுக்களும், கமல்ஹாசனை மனுவும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
சுயேச்சை வேட்பாளர்கள் அனைவரது மனுக்களும் நிராகரிக்கப்பட்டது. இதன் மூலம் திமுக, அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஆறு பேரும் போட்டி இன்றி தேர்வாகினர். இந்த நிலையில் கமல்ஹாசன், வருகிற 25-ந்தேதி அன்று பாராளுமன்றத்தில் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டு பதவியேற்கவுள்ளார் என மக்கள் நீதி மய்யம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: செய்தி தொடர்பாளர்களாக ஐஏஎஸ் அதிகாரிகள்... எங்க போகுது திராவிட மாடல் அரசு? தமிழிசை சரமாரி கேள்வி..!
இதையும் படிங்க: அதிகாரம் கையில கிடைச்சா இப்படியா பண்ணுவீங்க? ஒரே அராஜகம்.. விளாசிய இபிஎஸ்..!