முகத்தை சிதைத்தும், துடிதுடிக்க கொடூரமாக வெட்டியும் இருவர் கொலை... காஞ்சிபுரத்தில் பயங்கரம்...!
காஞ்சிபுரம் அருகே படுநெல்லி பகுதியில் கோவில் திருவிழாவில் ஏற்பட்ட பிரச்சனையில் இருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் அருகே கோவில் திருவிழாவில் ஏற்பட்ட பிரச்சனையில் இருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளனர். கொடூரமாக வெட்டியும், முகத்தைச் சிதைத்தும் கொலை செய்துவிட்டு தப்பியோடிய கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் படுநெல்லி கிராமத்தில் ஆடி திருவிழாவையொட்டி மாரியம்மன் கோவில் திருவிழா நேற்று, அதாவது ஞாயிற்றுக்கிழமை தொடங்கி செவ்வாய்க்கிழமை வரை நடைபெற இருந்தது. இந்த விழாவின் முதல் நாளையொட்டி பொன்னியம்மனுக்கு பொங்கல் வைத்து, பின்னர் இரவு சாமி வீதி உலா நடைபெற இருந்தது.
வீதி உலாவுக்கு முன்னதாக, அதே ஊரைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் அதிக மதுபோதையில் ஒலிபெருக்கியில் கானா பாடல்களை ஒலிக்கச் செய்து பிரச்சனையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதற்கு அங்கிருந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அங்கு பாதுகாப்புப் பணியில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர். இதையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.
இதையும் படிங்க: சென்னையை உலுக்கிய மாணவன் தனுஷ் கொலை சம்பவம்..! 6 பேர் கைது... தொடர் விசாரணை..!!
இந்த நிலையில், அதிக மதுபோதையில் இருந்த அந்த கும்பல், அதே பகுதியைச் சேர்ந்த சந்துரு மற்றும் விக்கி என்கிற நீலகண்டன் ஆகிய இருவரையும் முன்பகை காரணமாக சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொன்னேரிக்கரை போலீசார், இருவரின் உடல்களையும் கைப்பற்ற முற்பட்டபோது, உடல்களை எடுத்துச் செல்ல உறவினர்கள் மறுப்பு தெரிவித்தனர். இருவரின் உயிரிழப்புக்கும் போலீசார் அலட்சியமாக செயல்பட்டதே காரணம் எனக் கூறி, உறவினர்களும் கிராமத்தைச் சேர்ந்த சிலரும் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து நடைபெற்ற கடும் போராட்டத்திற்குப் பின்னர், இருவரின் உடல்களும் கைப்பற்றப்பட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாவட்ட எஸ்.பி. அரவிந்த் தலைமையில் சுமார் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு தப்பியோடிய கும்பலை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்த இருவருக்கும் அவர்களை வெட்டி படுகொலை செய்த கும்பலுக்கும் ஏற்கனவே முன்பகை இருந்ததாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் போலீசார் தொடர்ந்து விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர்.
கோவில் திருவிழாவில் இருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிகாலை முதலே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கோவை மாணவனுக்கு நடந்தது என்ன?... முதல் தகவல் அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள்..!