×
 

ஆட்சியில் பங்கு: தலைமையே முடிவெடுக்கும்! ராகுல் - கனிமொழி சந்திப்பை விமர்சித்த EPS-க்கு செல்வப்பெருந்தகை கண்டனம்!

ஆட்சி அதிகாரத்தில் பங்கு: தலைமையே முடிவு செய்யும் பாஜகவின் ஜிஎஸ்டி மற்றும் பிரதமர் மோடியின் இரட்டை வேடத்தைத் தோலுரித்த காங்கிரஸ் மாநிலத் தலைவர்.

திருவாரூரில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் புதிய மாவட்டத் தலைவர் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை, செய்தியாளர்களிடம் பேசுகையில் தமிழக அரசியல் களம் மற்றும் கூட்டணி விவகாரங்கள் குறித்துப் பல்வேறு அதிரடி கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.

எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் கனிமொழி எம்பி-யின் டெல்லி பயணம் குறித்து விமர்சித்திருந்த நிலையில், அதற்குச் செல்வப்பெருந்தகை மிகக்கடுமையான பதிலடியைக் கொடுத்தார். "எடப்பாடி பழனிசாமியைப் போல முகத்தை மூடிக்கொண்டு மாற்று காரில் கனிமொழி சென்று ராகுல் காந்தியைச் சந்திக்கவில்லை; அவர் ஒரு சிங்கப் பெண்ணாக நேரில் சென்று சந்தித்துள்ளார்" என்று சாடினார். மேலும், வரும் ஒரு வார காலத்திற்குள் தொகுதிப் பங்கீடு குறித்த அதிகாரப்பூர்வப் பேச்சுவார்த்தைகள் தொடங்கும் என்றும் அவர் உறுதிப்படுத்தினார்.

இதையும் படிங்க: திமுக ஆட்சியில் விண்ணை முட்டும் விலைவாசி.. கடனாளி என்ற பட்டம் தான் மக்களுக்கு..!! இபிஎஸ் விளாசல்..!!

தமிழக ஆட்சி அதிகாரத்தில் பங்கு கோருவது குறித்தக் கேள்விக்கு விடையளித்த அவர், "ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது குறித்துக் காங்கிரஸின் தலைமையையும், திமுகவின் தலைமையையும் இணைந்து முடிவு செய்யும். எங்களுக்கானத் தேவைகளைத் தெளிவாகக் கேட்டுப் பெறுவோம்; ஆனால் அதற்காகத் திமுகவிற்கு எவ்வித நெருக்கடிகளையும் அளிக்க மாட்டோம்" என்று தெரிவித்தார்.

மத்திய அரசின் செயல்பாடுகள் மற்றும் பிரதமர் மோடியின் பேச்சு குறித்து அவர் சாடுகையில், "தமிழகத்திற்கு வரும்போது தமிழையும், தமிழர்களையும் புகழ்ந்து பேசும் பிரதமர் மோடி, பீகார் போன்ற மாநிலங்களுக்குச் சென்றால் தமிழர்களை மோசமானவர்கள் என்று பேசுகிறார். இது அவரது இரட்டை வேடத்தைக் காட்டுகிறது. பாஜக ஆட்சியில் ஜிஎஸ்டி 40% வரை உயர்த்தப்பட்டதால் சிறு, குறு தொழில்கள் கடுமையாகச் சிதைந்துவிட்டன. தமிழகத்தின் உற்பத்தித் திறன் அதிகரித்துள்ளதால் கடன் கிடைப்பதில் சிக்கலில்லை; ஆனால் உத்தரப் பிரதேசத்திற்குக் கடன் வழங்க உலக வங்கி மறுத்துவிட்டது. எனவே எதிர்க்கட்சிகள் தமிழகத்தின் கடன் குறித்துக் கவலைப்படத் தேவையில்லை" எனத் தெரிவித்தார்.

இறுதியாக, திண்டிவனத்தில் சீரமைக்கப்பட்டு வரும் பேருந்து நிலையத்திற்கு பழைய பெயரான 'இந்திரா காந்தி பேருந்து நிலையம்' என்பதையே சூட்டித் திறக்க வேண்டும் எனத் தமிழக அரசுக்கும், முதலமைச்சருக்கும் அவர் கோரிக்கை விடுத்தார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்தாலும், ஒரு சில விடுதிகள் மற்றும் கல்லூரிகளில் சமூக விரோதிகள் செய்யும் செயல்களைத் தடுக்கக் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதையும் படிங்க: “எடப்பாடியாரை முதலமைச்சராக ஏற்போரை இருகரம் கூப்பி வரவேற்போம்!” - ஆர்.பி. உதயகுமார் அதிரடி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share