×
 

தொகுதி மறுவரையறையால் தமிழகத்துக்கு பாதிப்பு! கார்த்தி சிதம்பரம் எம்.பி. பேட்டி!

ஆன்லைனில் மது விற்பனை செய்வது நல்லது என்றும் தொகுதி மறுவரையறையால் தமிழக பிரதிநிதித்துவம் பாதிக்கப்படும் என்றும் கார்த்தி சிதம்பரம் எம்பி கூறியுள்ளார்.

ஆன்லைனில் மது விற்பனை செய்வது நல்லது என்று சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் மானாமதுரை மற்றும் சிங்கம்புணரி ஆகிய பகுதிகளில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பின்பு, அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார். 

தொகுதி மறுவரையறை தொடர்பாக அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும் விரிவான ஆலோசனை நடத்தப்பட வேண்டும். இந்திய நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் எந்தச் சூழலிலும் குறையக் கூடாது என்பதே எங்களின் முதன்மையான கவலை.

1976-ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யும்போது தென் மாநிலங்கள் பாதிக்கப்படும் என்ற அச்சத்தால் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 543 ஆக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் 2001-இல் வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசு, இந்த எண்ணிக்கையை மேலும் 25 ஆண்டுகளுக்குத் தொடர முடிவு செய்தது. அந்தக் காலக்கெடு தற்போது முடிவடைய உள்ளது.

இதையும் படிங்க: திமுக–பாஜக திடீர் நெருக்கம்?! முதல்வர் விஜய் தொகுதி மறுவரையறை கூட்டம் கூட்டியதன் பின்னணியில் பரபரப்பு!

மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் தொகுதிகள் 50% வரை உயர்ந்தால், தென் மாநிலங்களின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் வெகுவாகக் குறையும். இது தமிழ்நாட்டுக்குச் சாதகமான தீர்வாக இருக்காது. பாரதிய ஜனதா கட்சி தனது சுய அரசியல் ஆதாயத்திற்காகவே இதைச் செய்ய நினைக்கிறது.

ஆன்லைனில் மது விற்பனை செய்வது குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், ஆன்லைனில் மது விற்பனை செய்வது நல்லது எனக் குறிப்பிட்டார்.

பெட்ரோலில் எத்தனால் கலப்பதால் வாகனங்களின் இன்ஜின் பழுதடைகிறது. இத் திட்டத்தைப் போட்ட அமைச்சகத்திற்கே இதில் நேரடித் தொடர்பு இருப்பதாகக் கூறுகிறார்கள்; எனவே இத் திட்டத்தை உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

பழனி நில மோசடி வழக்கில் போலீஸ் கஸ்டடியில் இருப்பவர்களிடம் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும். சிபிசிஐடி (CB-CID) உரிய விசாரணை நடத்தி முழு அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும்.

மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது. காவிரி நீர்ப் பிரச்சினை 40 ஆண்டுகாலப் பிரச்சினை. மழைக்காலங்களில் பிரச்சினை குறைவதும், மழை இல்லாத காலங்களில் அதிகரிப்பதும் வழக்கம். காவிரி நீரைப் பகிர்வதற்கான நடைமுறைகள் ஏற்கனவே உள்ளதால், காவிரி மேலாண்மை வாரியம் அளித்துள்ள உத்தரவை முறையாக அமல்படுத்த வேண்டும். உடன்பாடு இல்லாதவர்கள் உச்ச நீதிமன்றத்தை நாடலாம்.

மேலும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கைது விவகாரம் குறித்த கேள்விக்குப் பதிலளித்த கார்த்தி சிதம்பரம், அவர் பேசியதும் தேவையற்றது, அதற்காக மேற்கொள்ளப்பட்ட கைது நடவடிக்கையும் தேவையற்றது என்று கூறித் தனது பேட்டியை நிறைவு செய்தார்.

இதையும் படிங்க: “தமிழர்களுக்கு அநீதி”..! தொகுதி மறுவரையறைக்கு எதிராக அமைச்சர் நிர்மல் குமார் காட்டம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share