விஜய் ஓட்டு வாங்குவார், ஆனா ஜெயிக்க முடியுமா? கார்த்திக் சிதம்பரம் எழுப்பும் அரசியல் கேள்வி!
செங்கல்பட்டு மாவட்டம் குரோம்பேட்டையில் நடைபெற்ற காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்திற்குப் பிறகு, சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
குரோம்பேட்டையில் இன்று நடைபெற்ற காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டத்தில் கலந்துகொண்ட சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம், செய்தியாளர்களைச் சந்தித்துப் பல்வேறு அரசியல் அதிரடிகளை முன்வைத்தார். குறிப்பாகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மற்றும் திமுகவுடனான கூட்டணி குறித்து அவர் பகிர்ந்த கருத்துக்கள் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளன.
விஜய்க்குப் பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது. அந்த ஆதரவு வாக்குகளாக மாறலாம், ஆனால் அவை 'சீட்டாக' (வெற்றியாக) மாறுமா என்பது பெரிய கேள்விக்குறிதான். தவெக-வின் கட்டமைப்பு தற்போது பலமாக இல்லை. நகர்ப்புறங்களில் விஜய்க்கு வாக்குகள் கிடைக்கலாம், ஆனால் கிராமப்புறங்களில் அது குறைவாகவே இருக்கும். சித்தாந்தம் இல்லாத முதல் தலைமுறை வாக்காளர்கள் தான் அவரை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள்.
இதையும் படிங்க: திமுக கூட்டணியில் முற்றும் மோதல்! செல்வப்பெருந்தகையை மிகக் கடுமையாக சாடிய விசிக வன்னி அரசு!
வரும் மார்ச் 16-ஆம் தேதி ராஜ்யசபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில், திமுகவிடம் ஒரு ராஜ்யசபா இடத்தைக் காங்கிரஸ் கேட்க வாய்ப்பு உள்ளது. பிப்ரவரி 22-ஆம் தேதி திமுக அமைக்கும் தொகுதிப் பங்கீட்டுக் குழுவிடம் இது குறித்துக் காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்தும். காங்கிரஸ் கட்சி தற்போது 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் விருப்ப மனுக்களை வாங்கி வைத்துள்ளது. தொகுதிப் பங்கீட்டு முடிவுகளுக்கு ஏற்ப, ஒதுக்கப்பட்ட இடங்களில் யாருக்கு சீட் தருவது என்பதைத் தலைமை முடிவு செய்யும்.
நீண்ட காலக் கூட்டணியில் இருக்கும்போது சின்னச் சின்னப் பிரச்சனைகள் வருவது இயல்பு. மாணிக்கம் தாகூரின் ட்விட்டர் கவிதை என்பது வெறும் பாரதியார் கவிதைதான், அதை அப்படியே பார்க்க வேண்டும். திமுக குறித்த அவரது மற்ற விமர்சனங்களுக்கு அவரிடம் தான் பதில் கேட்க வேண்டும். அதிமுகவின் வாக்கு வங்கியை ஒருபோதும் குறைத்து மதிப்பிட முடியாது. அவர்களுக்கும் கணிசமான பலம் உள்ளது. இந்தத் தேர்தல் கடுமையான போட்டியாக இருந்தாலும், ஒற்றுமையான 'இந்தியா' கூட்டணிதான் இறுதியில் வெற்றி பெறும்.
தமிழக வெற்றி கழகம் விசில் அடித்துக் கொள்ளட்டும், நாங்கள் கை அசைத்துக் கொண்டே (சின்னத்தைக் குறிப்பிட்டு) முன்னேறிச் செல்வோம் என நகைச்சுவையுடன் கார்த்திக் சிதம்பரம் தனது பேட்டியை நிறைவு செய்தார்.
இதையும் படிங்க: பாஜகவால் அதிமுகவின் வாக்கு வங்கி சிதையும்! காஞ்சிபுரத்தில் கார்த்தி சிதம்பரம் எம்.பி பேட்டி!