×
 

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: சிபிஐ விசாரணை கண்காணிப்புக் குழு வருகை: பொதுமக்கள் மனு அளிக்கச் சிறப்பு ஏற்பாடு!

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரணை கண்காணிப்புக் குழுவிடம் பொதுமக்கள் மனு அளிக்கச் சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

கரூர் மாவட்டத்தில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் நடைபெற்று வரும் முக்கிய விசாரணைகளைக் கண்காணிப்பதற்காக, உச்ச நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழு இன்று வருகை தந்துள்ளது. இந்தக் குழுவின் வருகையை முன்னிட்டு, கரூர் சிபிஐ அலுவலகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ம் தேதி தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய்  பரப்புரையின்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 நபர்கள் இறந்தது தொடர்பாக மத்திய புலனாய்வுத் துறையினரின் (சிபிஐ) விசாரணை நடைபெற்று வருகிறது. சிபிஐ அதிகாரிகள், சம்பவத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினர், காயமடைந்தவர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள், போலீசார், தவெக மாநில நிர்வாகிகள் மற்றும் வேலுச்சாமிபுரம் பகுதியைச் சேர்ந்த வியாபாரிகள் உள்ளிட்ட பல்வேறு நபர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

குறிப்பாக உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி சம்பவம் தொடர்பாகவும், இறந்தவர்கள் தொடர்பாகவும், அவர்கள் கூறிய கருத்துக்களை கேட்டுப் பதிவு செய்துள்ளனர். 

இதையும் படிங்க: கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: சிபிஐ விசாரணையை கண்காணிக்க ஓய்வு நீதிபதி அஜய் ரஸ்தோகி வருகை!

நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான இந்தக் கண்காணிப்புக் குழுவிடம் பாதிக்கப்பட்டவர்கள், பொதுமக்கள் மற்றும் அமைப்புகள் தாங்கள் குறித்த மனுக்களை நேரடியாகச் சமர்ப்பிக்கலாமென மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது.

அதன்படி, பொதுமக்கள் தங்கள் மனுக்களைச் சமர்ப்பிக்க வசதியாக, சிபிஐ அலுவலகம் அருகே சாமியானா பந்தல் அமைக்கப்பட்டு இருக்கைகள் போடப்பட்டுள்ளன. இதன் மூலம், விசாரணையின் நிலை மற்றும் நீதி தொடர்பான தங்கள் கோரிக்கைகளை நேரடியாகப் பதிவு செய்ய மக்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்தக் கண்காணிப்பு நடவடிக்கையானது, கரூரில் உள்ள முக்கிய வழக்குகளில் வெளிப்படைத்தன்மையையும், நீதியையும் உறுதி செய்யும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த விசாரணையை மேற்பார்வை செய்திட  உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட மேற்பார்வைக்குழுவினர் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி, தலைமையில் கூடுதல் காவல்துறை இயக்குனர் சுமித் சரண், ஜோனல் வி.மிஸ்ரா இன்று கரூர் சிபிஐ அலுவலகம் வருகை தந்து இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் இதர பொது மக்கள் அமைப்புகள் ஆகியோரிடம் மனுக்களைப் பெற உள்ளனர்.

மேலும் இந்த வழக்கில் சிபிஐ இதுவரை செய்த விசாரணையை ஆய்வு செய்ய உள்ளனர். பொதுமக்கள் மற்றும் அமைப்புகளிடமிருந்து இந்த வழக்கு குறித்து மனு பெறும் நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் தங்கவேலு, எஸ்பி ஜோஷி தங்கையா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

இதையும் படிங்க: அங்கு என்ன நடந்தது? கரூர் சம்பவத்தில் காயமடைந்தவர்களிடம் சிபிஐ அதிகாரிகள் துருவி துருவி விசாரணை...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share