கரூர் மாநகராட்சி வரி பாக்கி பட்டியலில் திமுக அலுவலகம் 2வது இடம்! அம்மாடியோவ்! எவ்வளவு தெரியுமா?
அதிக சொத்து வரி பாக்கி வைத்துள்ளவர்களின் பட்டியலில் அரசியல் கட்சி அலுவலகம் இடம்பெற்றிருப்பது தற்போது கரூரில் பேசுபொருளாகியுள்ளது.
கரூர்: கரூர் மாநகராட்சிக்கு அதிக அளவில் சொத்து வரி பாக்கி வைத்துள்ளவர்களின் முதல் 100 பேர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அதில் கரூர் மாவட்ட தி.மு.க. அலுவலகம் 2வது இடத்தில் இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த அலுவலகம் ரூ.28.33 லட்சம் சொத்து வரியை நிலுவையில் வைத்துள்ளதாக மாநகராட்சி பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரூர் மாநகராட்சியின் முக்கிய வருவாய் ஆதாரங்களில் சொத்து வரி முக்கியமானதாக உள்ளது. பொதுமக்களிடம் இருந்து வசூலிக்கப்படும் சொத்து வரி மூலம் நகரில் குப்பை அகற்றுதல், தெருவிளக்கு பராமரிப்பு, பூங்காக்கள் பராமரிப்பு, சாலை பணிகள், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதனால் மாநகராட்சிக்கு வர வேண்டிய வரி பாக்கியை வசூலிக்கும் பணிகள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 1 முதல் 48-வது வார்டுகள் வரை சொத்து வரி வசூலில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: “கோவிந்தா... கோவிந்தா...” - கரூரில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் கோயில் நில விவகாரம்... வெடித்தது நூதன போராட்டம்...!
இதன் ஒரு பகுதியாக, அதிக அளவில் சொத்து வரி நிலுவை வைத்துள்ள முதல் 100 பேரின் பட்டியல் கரூர் மாநகராட்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் 33-வது வார்டு, கரூர்–திண்டுக்கல் சாலையைச் சேர்ந்த ராமசாமி, நாராயணசாமி ஆகியோர் ரூ.36.48 லட்சம் சொத்து வரி பாக்கியுடன் முதலிடத்தில் உள்ளனர்.
இதற்கு அடுத்ததாக 30-வது வார்டு, கவுரிபுரம் விரிவாக்கப் பகுதியில் அமைந்துள்ள கரூர் மாவட்ட தி.மு.க. அலுவலகம் இடம்பெற்றுள்ளது. அந்த அலுவலகம் கடந்த 2008-ம் ஆண்டு திறக்கப்பட்டபோது ஆண்டுக்கு ரூ.1.18 லட்சம் சொத்து வரி நிர்ணயிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
தற்போது அந்த சொத்துக்கான ஆண்டு சொத்து வரி ரூ.2.36 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2008-ம் ஆண்டு முதல் 2026 மார்ச் வரையிலான காலகட்டத்தில் ரூ.28.33 லட்சம் சொத்து வரி நிலுவையில் இருப்பதாக மாநகராட்சி வெளியிட்டுள்ள பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிக சொத்து வரி பாக்கி வைத்துள்ளவர்களின் பட்டியலில் அரசியல் கட்சி அலுவலகம் இடம்பெற்றிருப்பது தற்போது கரூரில் பேசுபொருளாகியுள்ளது. மாநகராட்சியின் வருவாய் வசூல் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், நிலுவையில் உள்ள தொகைகளை வசூலிக்க அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, மாநகராட்சியின் அத்தியாவசிய பணிகளுக்கான நிதி ஆதாரத்தை வலுப்படுத்த, பொதுமக்கள் மற்றும் நிறுவனங்கள் தங்களது சொத்து வரியை உரிய காலத்தில் செலுத்த வேண்டும் என உள்ளாட்சி அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
இதையும் படிங்க: கரூர் அரசுப்பணி விவகாரம்..! தவிக்கும் குடும்பங்கள்..!! வரும் 14ஆம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை..!!