#BREAKING: அசாதாரண நிலை.. இரவோடு இரவாக கரூர் சென்ற முதலமைச்சர் ஸ்டாலின்... உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி...!
விஜய் பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசலில் உயிரிழப்புகள் ஏற்பட்ட நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் கரூருக்கு சென்றுள்ளார்.
தமிழக வெற்றிக் கழக தலைவரும் நடிகருமான விஜயின் கரூர் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் தமிழகத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இதில் 8 குழந்தைகள், 16 பெண்கள் உள்ளிட்ட அப்பாவி மக்கள் பலியானது மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. காயமடைந்த பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 50 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
கரூரில் உள்ள வேலுசாமிபுரத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் விஜயை நேரில் காண வந்தனர். போலீஸ் அனுமதி மனுவில் 10 ஆயிரம் பேர் மட்டுமே பங்கேற்பார்கள் என்று குறிப்பிட்டிருந்த போதிலும், உண்மையில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூட்டத்தில் திரண்டனர், விஜய் 6 மணி நேரம் தாமதமாக வந்ததால், வெயில் வாட்டும் பகலில் காத்திருந்த மக்கள் சோர்வடைந்தனர்.
குழந்தைகள் மற்றும் பெண்கள் அதிகம் இருந்ததால், 9 வயது சிறுமி ஒருவர் காணாமல் போனதாக வந்த தகவல் கூட்டத்தை இன்னும் குழப்பமானதாக்கியது. இதனால் ஏற்பட்ட அச்சத்தால் மக்கள் ஒரே நேரத்தில் வெளியேற முயன்றபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
இதையும் படிங்க: அய்யோ! பிணவறையை பார்க்கும்போதே…. உடைந்து அழுத கரூர் எம்.பி. ஜோதிமணி…!
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இச்சம்பவத்தை அறிந்ததும் உடனடியாக கரூர் மாவட்ட ஆட்சியர், போலீஸ் உயரதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இது துயரமான சம்பவம். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 10 லட்சம் ரூபாய் நிதி உதவி அளிக்கப்படும் என்று அறிவித்தார். சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாதிக்கப்பட்டவர்களை ஆறுதல்படுத்தினர்.
அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு முதலமைச்சர் ஸ்டாலின் கரூர் மாவட்டத்திற்கு சென்றுள்ளார். சென்னையில் இருந்து தனி விமான மூலம் திருச்சிக்கு சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், சாலை மார்க்கமாக கரூருக்கு சென்றார். கரூர் அரசு மருத்துவமனைக்கு சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், நிலைமை குறித்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு மலர் வளையம் வைத்து முதலமைச்சர் அஞ்சலி செலுத்தினார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலின், சிகிச்சையில் இருப்பவர்கள் விரைவில் குணமடைய வேண்டினார். மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: தாங்க முடியல… எல்லாரும் என் கண்ணுக்கு முன்னாடியே… நேரலையில் உடைந்து அழுத செய்தியாளர்…!