தடைப்பட்ட குடிநீர் விநியோகம்! பாறை இடுக்கில் சொட்டும் நீரை பிடித்துச் செல்லும் அவலம்…
கொடைக்கானல் குறிஞ்சி நகர் பகுதியில் தண்ணீர் விநியோகம் தடைப்பட்டதால் மக்கள் அல்லாடும் நிலை ஏற்பட்டுள்ளது.
கொடைக்கானல் அருகே உள்ள குறிஞ்சி நகர் பகுதியில் குடிநீர் வினியோகம் தடைபட்டுள்ளதால் ஒரு கிலோமீட்டர் நடந்து பாறைகளின் நடுவே வரக்கூடிய தண்ணீரை இலைகள் வைத்து குடிதண்ணீருக்காக பெண்கள் சுமந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட குறிஞ்சி நகர் பகுதியில் கடந்த சில மாதங்களாக குடிநீர் விநியோகம் இல்லாததால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். குறிப்பாக கொடைக்கானல் மலைப்பகுதியில் சமீபமாக போதிய பருவ மழை இல்லாத காரணத்தால் விவசாயிகளும் பொதுமக்களும் பெரும் அவதி அடைந்து வரும் நிலையில் இங்கு இருக்கக்கூடிய கிராம மக்கள் கடந்த சில மாதங்களாகவே தண்ணீர் வராத காரணத்தினால் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள பாறைகளில் இருந்து வழியும் சொட்டு நீரை இலைகள் வைத்து சிறு பாத்திரத்தில் சேமித்து அதை குடத்தில் ஊற்றி கொண்டு தலை சுமையாக கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. பாதையில்லாத வழியில் சுமார் 500 மீட்டர் தூரம் தலை சுமையாக சுமந்து செல்கின்றனர்.
இதையும் படிங்க: டன் கணக்கில் குப்பை... போர்க்களம் போல் காட்சியளிக்கும் தவெக மாநாட்டு திடல்!
மேலும் தங்களது வீட்டில் வயதானவர்கள், உடல்நிலை சரியில்லாதவர்கள் குழந்தைகள் என இருக்கும் நிலையில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக ஓடை நீரும் வற்றியதால் குடிநீர் இல்லாததால் பெரும் சிரமம் அடைந்து வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். குடிநீர் தேவைக்காக வேலைக்கு கூட செல்ல முடியாத அவல நிலையும் உள்ளதாக வேதனை தெரிவித்தனர்.
இதையும் படிங்க: கொட்டி கிடக்கும் கல்லு கோபுரம் ஆகாது! விஜய்க்கு தலைக்கால் புரியல... Ex. அமைச்சர் செம்மலை விளாசல்..!