×
 

பயன்பாட்டுக்கு வந்தது செம்மொழிப் பூங்கா..!! கோவை மக்கள் ஹேப்பி அண்ணாச்சி..!!

கோவை காந்திபுரத்தில் புதிதாக திறக்கப்பட்ட செம்மொழி பூங்காவில் பொதுமக்களுக்கு இன்று முதல் அனுமதி வழங்கப்படுவதாக மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

கோவை மாநகரின் புதிய அடையாளமாக உருவெடுத்துள்ள செம்மொழிப் பூங்காவில் பொதுமக்களுக்கு இன்று முதல் அனுமதி வழங்கப்படுவதாக கோவை மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. காந்திபுரம் பகுதியில் உள்ள மத்திய சிறைச்சாலை வளாகத்தில் 165 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்ட இந்தப் பூங்கா, கடந்த நவம்பர் 25-ஆம் தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

முதற்கட்ட பணிகள் ரூ.208.50 கோடி செலவில் நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்த செம்மொழிப் பூங்கா, தமிழின் செம்மொழி அந்தஸ்தை வெளிப்படுத்தும் வகையில் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்ட தாவரங்களை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: துடிக்க துடிக்க மனைவி கொலை.. சடலத்துடன் WhatsApp Status வைத்த கணவன்..!! கொடூர சம்பவத்தின் பின்னணி என்ன..??

செம்மொழிக் காடு, மூலிகைத் தோட்டம், மகரந்தத் தோட்டம், நீர்த் தோட்டம், நறுமணத் தோட்டம், பாலைத் தோட்டம், மலைத் தோட்டம், மூங்கில் தோட்டம், நட்சத்திரத் தோட்டம், ரோஜா தோட்டம், பசுமைக்காடு உள்ளிட்ட 23 வகையான தோட்டங்கள் இங்கு அமைக்கப்பட்டுள்ளன. செண்பகம், கால் இலவு, மிளகு, கடல் திராட்சை, திருவோட்டு, கலிபூடா, வரிகமுகு, மலைப்பூ, எலிசுழி, குங்கும மரம் போன்ற சங்க இலக்கிய தாவரங்கள் 2,000-க்கும் மேற்பட்ட ரோஜா வகைகளுடன் இணைந்து பூங்காவை அழகூட்டுகின்றன.

பூங்காவின் சிறப்பம்சங்களாக, கடையெழு வள்ளல்களின் சிலைகள், மரங்கள் மற்றும் தாவரங்களைப் பற்றிய தகவல்களுக்கான க்யூஆர் கோடுகள், 500 பேர் அமரக்கூடிய திறந்தவெளி அரங்கம், தோட்டத் தொழிலாளர்களுக்கான அறைகள், உணவகம், உடைமாற்று அறை, சில்லறை விற்பனை கடை ஆகியவை உள்ளன.

வாகன நிறுத்துமிடத்தில் 453 கார்கள், 10 பேருந்துகள், 1,000 இரு சக்கர வாகனங்கள் நிறுத்தலாம். ஜெர்மன் தொழில்நுட்பத்தில் 2 கி.மீ. தூரத்திற்கு மழைநீர் சேகரிப்பு அமைப்பு உள்ளது. வாக்கிங் பாதைகள், சாலைகள், உயர்தர உடற்பயிற்சி கருவிகளுடன் கூடிய வெளிப்புற ஜிம், 4,000 சதுர அடி காட்டு மாதிரி காட்சி, 14,000 சதுர அடி குழந்தைகள் விளையாட்டு மைதானம், உள்ளரங்க விளையாட்டு அறை, மாற்றுத்திறனாளிகளுக்கான தனி விளையாட்டு மைதானம் ஆகியவை பூங்காவை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளன.

மேலும், பழங்கால தமிழ் பொருட்களுடன் அருங்காட்சியகம், தாவரவியல் அருங்காட்சியகம், நூலகம் ஆகியவை அறிவு சார்ந்த அனுபவத்தை வழங்குகின்றன. முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகள் மற்றும் பேட்டரி வாகனங்கள் வசதி செய்யப்பட்டுள்ளன. இரவு நேரத்தில் வண்ண விளக்குகளால் பூங்கா ஒளிரும்.

பூங்காவின் இயக்க நேரம் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை. நுழைவுக் கட்டணமாக 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ரூ.5, பெரியவர்களுக்கு ரூ.15, நடைபயிற்சிக்கு மாதாந்திர அட்டை ரூ.100. புகைப்பட கேமராவுக்கு ரூ.25, வீடியோ கேமராவுக்கு ரூ.50, குறும்படம் படப்பிடிப்புக்கு ரூ.2,000, திரைப்பட படப்பிடிப்புக்கு ரூ.25,000 வசூலிக்கப்படும்.

இந்தப் பூங்கா உலகத்தரம் வாய்ந்த நவீன வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இயற்கை அழகையும், தமிழ் பாரம்பரியத்தையும் ஒருங்கே அனுபவிக்கும் வாய்ப்பை வழங்கும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கோவை மக்களிடையே இந்த அறிவிப்பு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. பூங்காவைப் பராமரிக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தமிழ்நாட்டை வஞ்சிக்கும் பாஜக... விளைவு பயங்கரமா இருக்கும்... திருமா. வார்னிங்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share