தமிழ்நாட்டை வஞ்சிக்கும் பாஜக... விளைவு பயங்கரமா இருக்கும்... திருமா. வார்னிங்...!
கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்கள் நிராகரித்து கூட்டாட்சி முறையை சிதைக்கும் பாஜக அரசைக் கண்டிப்பதாக திருமாவளவன் தெரிவித்தார்.
மெட்ரோ ரயில் திட்டங்களை வழங்குவதில் தமிழ்நாட்டை ஒன்றிய பாஜக அரசு தொடர்ந்து புறக்கணித்து வருகிறது., இதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிப்பாக கட்சியின் தலைவர் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் உள்ள பெரிய நகரங்களான மதுரை கோயம்புத்தூர் ஆகியவற்றுக்கு மெட்ரோ ரயில் திட்டங்களை வழங்குமாறு விரிவான திட்ட அறிக்கையை தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசுக்கு சமர்ப்பித்திருந்தது. பாஜக ஆளும் மாநிலங்களில் இந்த இரண்டு நகரங்களை விட சிறிய ஊர்களுக்கு மெட்ரோ ரயில் திட்டங்களை வழங்கியிருக்கும் ஒன்றிய பாஜக அரசு தமிழ்நாட்டிலிருந்து சமர்ப்பிக்கப்பட்ட திட்டங்களை நிராகரித்திருக்கிறது என்று கூறினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் கண்டனம் தெரிவித்ததும் ஒன்றிய நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் மனோகர் லால் கட்டார் அதற்கு விளக்கமளித்திருக்கிறார் என்றும் 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையாக வைத்து இந்த இரு நகரங்களிலும் மெட்ரோ ரயில் திட்டங்களை செயல்படுத்தும் அளவுக்கு மக்கள் தொகை இல்லை என்ற காரணத்தை மத்திய அரசு கூறி இருப்பது வியப்பளிக்கிறது எனவும் தெரிவித்தார்.
2011 ஆம் ஆண்டுக்குப் பிறகு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு எடுக்கப்படாததால் அந்தப் புள்ளி விவரங்களை வைத்து இந்த திட்டங்களை நிராகரித்திருப்பது சரியானது அல்ல என்றும் இடைப்பட்ட 14 ஆண்டுகளில் இந்த இரு நகரங்களிலும் மக்கள் தொகை பல மடங்கு கூடியிருக்கிறது எனவும் இதை கவனத்தில் கொள்ளாதது அவர்களுடைய பாரபட்சமான அணுகுமுறையையே காட்டுகிறது எனவும் கூறினார்.
இதையும் படிங்க: வந்துபோன ஈரம் கூட காயல... அதுக்குள்ள அடுத்த துரோகம்... மத்திய அரசை விளாசிய முதல்வர் ஸ்டாலின்...!
மதுரை, கோயம்புத்தூர் நகரங்களுக்கு மெட்ரோ ரயில் திட்டம் வழங்கப்படாதது பாஜகவின் தமிழ்நாடு விரோத நிலைப்பாடே காரணம் என்று கூறிய திருமாவளவன், இதை மூடி மறைப்பது போல் தமிழ்நாடு அரசு சமர்ப்பித்த திட்ட அறிக்கையில் குறைபாடுகள் உள்ளதாக பொய் செய்தியை பாஜகவினர் பரப்பி வருகின்றனர் என்றும் கூட்டாட்சி முறையை சீர்குலைக்கும் வகையில் தொடர்ந்து தமிழ்நாட்டைப் புறக்கணித்து வருகின்ற மத்திய பாஜக அரசு, தனது போக்கைத் திருத்திக் கொள்ள வேண்டுமென்றும் கூறியுள்ளார். இல்லை என்றால் தமிழ்நாடு மக்களின் கடுமையான எதிர்ப்பை அவர்கள் சந்திக்க நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இதெல்லாம் தமிழ்நாட்டுக்கு பேராபத்து... ஆதங்கத்தை வெளிப்படுத்திய வைகோ...!