கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி சம்பவம்..! அரசு பேருந்து டிரைவர்கள் மீது சரமாரி தாக்குதல்... ஒருவர் கைது..!!
கிருஷ்ணகிரியில் பேருந்து ஓட்டுநர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர் அருகே மத்திகரி பகுதியில் நள்ளிரவு நேரத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் மீது மது போதையில் இருந்த இருசக்கர வாகனப் பயணிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தில் இரு ஓட்டுநர்கள் மற்றும் ஒரு பயணி காயமடைந்தனர். ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மற்ற இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
மத்திகரி அருகே அரசுப் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது மது போதையில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் பேருந்துக்கு முன்னால் குறுக்கே வந்துள்ளனர். இதைப் பார்த்த பேருந்து ஓட்டுநர் முருகன் அவர்களை கண்டித்து தட்டிக்கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த அந்த இருவரும் பேருந்தை வழிமறித்து ஓட்டுநர் முருகன் மீது தாக்குதல் நடத்தினர். மேலும், பேருந்தையும் சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
அதே பகுதியில் எதிரே வந்த மற்றொரு அரசுப் பேருந்தின் ஓட்டுநர் பெருமாள் சம்பவத்தைப் பார்த்து தட்டிக்கேட்டபோது, அவரையும் தாக்கியுள்ளனர். அப்போது பேருந்தில் பயணம் செய்த திம்மராஜா என்பவரும் தாக்குதலுக்கு உள்ளானார். மூவருக்கும் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: தினமும் 2 மணி நேரம் மின்தடை! சுழற்சி முறையில் பவர்கட்! சென்னை தவிர்த்து பிற மாவட்ட மக்கள் அவதி!
இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். தாக்குதலில் ஈடுபட்ட ஜெகதீஷ் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். மற்ற இரு நபர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: மாணிக்கம் தாகூர் Vsபிரவீன் சக்கரவர்த்தி! தமிழக காங்., தலைவர் பதவிக்கு கடும் மோதல்!