×
 

தினமும் 2 மணி நேரம் மின்தடை! சுழற்சி முறையில் பவர்கட்! சென்னை தவிர்த்து பிற மாவட்ட மக்கள் அவதி!

சென்னை தவிர்த்த மற்ற மாவட்டங்களில், சுழற்சி முறையில், இரண்டு மணி நேரம் அறிவிக்கப்படாத மின் தடை செய்யப்படுகிறது.

சென்னை: தமிழகத்தில் தொடரும் கடும் வெயிலால் மின் தேவை எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ள நிலையில், சென்னை தவிர்த்த அனைத்து மாவட்டங்களிலும் சுழற்சி முறையில் அறிவிக்கப்படாத இரண்டு மணி நேர மின் தடை அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

தமிழகத்தில் தினசரி சராசரி மின் தேவை 16,000 மெகாவாட்டாக இருந்த நிலையில், ஏப்ரல் 29 அன்று 21,307 மெகாவாட்டாக உச்சத்தைத் தொட்டது. வழக்கமாக ஜூன் மாதத்தில் வெயில் தணியும் என எதிர்பார்க்கப்பட்டாலும், இந்த ஆண்டு வெயில் தொடர்வதால் வீடுகளில் ஏசி பயன்பாடு கணிசமாக அதிகரித்துள்ளது. இதனால் மின் தேவையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஆனால், தேவையை ஈடுகட்டும் அளவுக்கு மின்சார உற்பத்தி இல்லாததால் பல மாவட்டங்களில் மின் தடை தவிர்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இரவு நேரங்களில் ஏற்படும் மின் தடை காரணமாக மக்கள் தூங்க முடியாமல் அவதிப்படுகின்றனர். தொழில் நிறுவனங்களும் உற்பத்தி பாதிக்கப்பட்டு பெரும் இழப்பை சந்தித்து வருகின்றன. குறிப்பாக சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன.

இதையும் படிங்க: திருச்செந்தூர் கோயில் முறைகேடு புகார்! அதிகாரிகள் தடுக்க தவறியது ஏன்? ஹைகோர்ட் சரமாரி கேள்வி!

தமிழக நூற்பாலை சங்க முதன்மை ஆலோசகர் கே.வெங்கடாச்சலம் இது குறித்து கூறுகையில், “தமிழகத்தில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக ஒவ்வொரு பகுதியிலும் அறிவிக்கப்படாத மின் தடை அமல்படுத்தப்பட்டு வருகிறது. சில இடங்களில் இரண்டு மணி நேரமும், சில இடங்களில் ஒரு மணி நேரமும் மின் தடை நீடிக்கிறது. மின் தேவையை சமாளிக்கும் அளவுக்கு மின்சாரம் இல்லாததே இதற்கு முக்கிய காரணம்” என்றார்.

மேலும் அவர் கூறியதாவது, “1400 மெகாவாட் வரை சூரியசக்தி மின் உற்பத்தி நிலையங்கள் தயாராக இருந்தும், துணை மின் நிலையங்கள் இணைப்பு வழங்காததால் அவை செயல்படுத்தப்படாமல் உள்ளன. இதனால்தான் மின் உற்பத்தியில் பெரும் சரிவு ஏற்பட்டு மின் தடை அதிகரித்துள்ளது” என்றார்.

மக்கள் மற்றும் தொழிலதிபர்கள் மின் தடையை உடனடியாக குறைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு வலியுறுத்தி வருகின்றனர். கோடை வெயில் இன்னும் சில வாரங்கள் தொடரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், மின் தடை பிரச்சனை தீவிரமடையாமல் பார்த்துக் கொள்ள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்துத் தரப்பினரும் வலியுறுத்துகின்றனர்.

இதையும் படிங்க: பத்திர பதிவு துறையில் அதிரடி! 6 மாவட்ட பதிவாளர்கள் சஸ்பெண்ட்! முறைகேடு புகார் காரணமாக நடவடிக்கை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share