ஒரு வார்த்தைக்கு 9 பிரிவா.? இதெல்லாம் நியாயமா CM விஜய்..? கிருஷ்ணசாமி சரமாரி கேள்வி..!!
உதயநிதி ஸ்டாலின் கைது சம்பவத்திற்கு கிருஷ்ணசாமி கண்டனம் தெரிவித்தார்.
ஒரு வார்த்தைக்கு ஒன்பது பிரிவுகளில் வழக்கு எதற்கு என்றும் அவசர கைது நடவடிக்கை ஏன் எனவும் உதயநிதி ஸ்டாலின் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் எனவும் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி வலியுறுத்தினார்.
டெல்டா மாவட்டங்களின் வாழ்வாதாரமாக விளங்கும் காவிரி விவகாரம் குறித்து நேற்று திமுக சார்பில் தஞ்சையில் நடைபெற்ற கூட்டத்தில் ’ஆட்சேபகரமான ஆபாசமான’ முறையில் பேசியதாக, த.வெ.க சார்பில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், இன்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என கூறியுள்ளார்.
நேரடியாக அவர் எந்தவொரு தனிநபரின் பெயரையும் குறிப்பிட்டுப் பேசாத பொழுது, மறைமுகப் பொருள் கொண்டு உதயநிதி அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்வதோ, கைது செய்வதோ ஏற்புடையதல்ல. எதிர்க்கட்சித் தலைவர்கள் மேடைகளில் பேசக்கூடிய பேச்சுக்களுக்கெல்லாம் வரிக்கு வரி பொருள் கண்டு உள்நோக்கம் கற்பிக்க ஆரம்பித்தால், தினமும் நூற்றுக்கணக்கான வழக்குகளைப் பதிவு செய்துகொண்டே இருக்க நேரிடும் என்றார்.
இதையும் படிங்க: பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும்! உதயநிதி கைது குறித்து அமைச்சர் அருண் ராஜ் விளக்கம்!
மேலும், தமிழர்களின் வாழ்வாதாரக் காவிரிப் பிரச்சனைக்காகப் போராடும் சமயத்தில், தொண்டர்களின் தேவையற்ற தனிநபர் கோஷங்களை உதயநிதி ஸ்டாலின் கண்டித்திருக்க வேண்டும். அதேபோன்று ஆபாசமாகப் பொருள்படும் வார்த்தைகளை அவரும் தவிர்த்திருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
யாருடைய மனதாவது புண்பட்டு இருந்தால் உதயநிதி ஸ்டாலினை மன்னிப்பு கோர செய்திருக்க வேண்டும் அல்லது வருத்தம் தெரிவித்து இருக்க வைக்க வேண்டும் என்றும் அவர் அதற்கு மறுத்தால் மான நஷ்ட வழக்கு தொடரலாமே தவிர ஒரு வார்த்தைக்காக ஒன்பது பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்வது ஏற்புடையது அல்ல என்றும் இது தவறான முன் உதாரணமாக அமைந்துவிடும் எனவும் குறிப்பிட்டார்.
மேலும், நாளை பட்ஜெட் கூட்டம் தொடங்கவுள்ள நிலையில் எதிர்க்கட்சித் தலைவரைக் கைது செய்து சிறையிலடைக்க முயல்வது ஜனநாயக மாண்புகளைச் சிதைக்கும் நடவடிக்கையாகவே கருதப்படும் என்றும் உதயநிதி ஸ்டாலினை உடனடியாக விடுவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: ஆணவம் அழிவுக்கு வழிவகுக்கும்! தவெக அரசுக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!