×
 

அக்.11ல் குலசை தசரா கோலாகல தொடக்கம்..! முக்கிய கட்டுப்பாடுகள் விதித்து ஆட்சியர் உத்தரவு..!!

குலசை தசரா தொடங்க உள்ள நிலையில் முக்கிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அக்டோபர் 11ஆம் தேதி கொடியேற்றத்துடன் உலகப்புகழ் பெற்ற குலசை தசரா திருவிழா கோலாகலமாகத் தொடங்கவுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூருக்கு அருகே உள்ள குலசேகரபட்டினம் முத்தாரம்மன் திருக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் இந்த விழா, மைசூர் தசராவுக்கு அடுத்தபடியாக இந்தியாவிலேயே மிகவும் பிரசித்தி பெற்றதாகக் கருதப்படுகிறது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் விரதமிருந்து, பல்வேறு தெய்வ வேடங்கள் அணிந்து காணிக்கை செலுத்தி வழிபடும் இந்த திருவிழா, பக்தி உணர்வோடு கலாச்சாரக் கொண்டாட்டமாகவும் விளங்குகிறது.

இந்த ஆண்டு தசரா விழா அக்டோபர் 11ஆம் தேதி காலையில் திருக்கொடியேற்றத்துடன் துவங்கும். அதைத் தொடர்ந்து பத்து நாட்களுக்கு மேல் நடைபெறும் விழாவின் உச்சக்கட்ட நிகழ்ச்சியாக மகிஷாசுர சம்ஹாரம் அக்டோபர் 20ஆம் தேதி குலசை கடற்கரையில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரதமிருக்கும் பக்தர்கள் காளி, சிவன், விஷ்ணு உள்ளிட்ட வேடங்களில் தோன்றி, ஊர்வலங்களில் பங்கேற்று, அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவர். சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கானோர் வருகை தரவுள்ள நிலையில், போக்குவரத்து, பாதுகாப்பு, தண்ணீர், மருத்துவ வசதிகள் உள்ளிட்ட முன்னேற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்தப் பின்னணியில், விழாவின் பக்தித் தன்மையைப் பாதுகாக்கும் நோக்கில் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. உலகப்புகழ் பெற்ற குலசை தசராவுக்கு சினிமா பிரபலங்களை அழைத்து வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி அழைத்து வரும் தசரா குழுக்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்செந்தூர் கோட்டாட்சியர் எச்சரித்துள்ளார். கோயில் திருவிழாவின் போது சினிமா நட்சத்திரங்களைக் கொண்டு வந்து ஆடல்-பாடல் நிகழ்ச்சிகளை நடத்துவது, பக்திச் சூழலை பாதிக்கும் என்ற கருத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இதையும் படிங்க: வேளாங்கண்ணி திருவிழா: தாம்பரம் - வேளாங்கண்ணி இடையே சிறப்பு வாராந்திர ரயில்கள் இயக்கம்!

கடந்த சில ஆண்டுகளாகவே குலசை தசராவில் சினிமா பாடல்கள், ஆபாச நடனங்கள் மற்றும் பணம் பெற்று நடத்தப்படும் கலை நிகழ்ச்சிகள் குறித்து பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன. இதனால் உயர் நீதிமன்றம் பக்திப் பாடல்கள் அல்லாத சினிமா பாடல்களைப் பாடவோ, ஆடவோ தடை விதித்து உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவுகளின் அடிப்படையில், இந்த ஆண்டும் விழா முழுவதும் பக்தி உணர்வுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது. 

 

இதையும் படிங்க: நெருங்கியது இடைத் தேர்தல்... இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு..!! பரபரக்கும் அரசியல் களம்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share