×
 

'ஜனநாயகம்' பட சென்சார் வழக்கு: வாபஸ் பெற நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்த KVN புரொடக்‌ஷன்ஸ்!

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜனநாயகம்' (Jana Nayagan) திரைப்படத்தின் சென்சார் சான்றிதழ் தொடர்பான சட்டப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர அதன் தயாரிப்பு நிறுவனமான KVN புரோடக்சன்ஸ் முடிவு செய்துள்ளது.

'ஜனநாயகம்' படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்க மத்திய தணிக்கை வாரியத்திற்கு (CBFC) உத்தரவிடக் கோரித் தாக்கல் செய்திருந்த வழக்கை வாபஸ் பெறுவதாகத் தயாரிப்பாளர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றப் பதிவுத்துறையில் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது.

தயாரிப்பாளர் தரப்பு வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியம் அளித்துள்ள கடிதத்தில், படத்தை மறுஆய்வு செய்யும்படி மத்திய தணிக்கை வாரியத்தையே (CBFC) நேரடியாக அணுகத் தயாரிப்பாளர் முடிவு செய்துள்ளார். எனவே, நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கை மேலும் தொடர விரும்பவில்லை, என்று தெரிவித்துள்ளார். இந்த வாபஸ் மனு, நீதிபதி பி.டி. ஆஷா முன்னிலையில் இன்னும் ஓரிரு நாட்களில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே தனி நீதிபதி படத்திற்குச் சான்றிதழ் வழங்க உத்தரவிட்ட நிலையில், அதனை எதிர்த்துச் சென்சார் வாரியம் தாக்கல் செய்த மேல்முறையீட்டில் சென்னை உயர் நீதிமன்ற அமர்வு இடைக்காலத் தடை விதித்தது. உச்ச நீதிமன்றமும் இந்த விவகாரத்தில் தலையிட மறுத்து, உயர் நீதிமன்றத்தையே அணுகுமாறு அறிவுறுத்தியது.

இதையும் படிங்க: விஜய்யை இனிமேல்தான் விமர்சிப்பேன்! அண்ணாமலை எச்சரிக்கை!

பொங்கல் ரிலீஸ் (ஜனவரி 9) தள்ளிப்போன நிலையில், நீதிமன்ற விசாரணை மற்றும் தீர்ப்புக்காகக் காத்திருப்பது மேலும் காலதாமதத்தை உண்டாக்கும் என்பதால், சென்சார் வாரியத்தின் மறுஆய்வுக் குழுவின் முடிவிற்கே இப்படத்தை அனுப்பத் தயாரிப்பாளர் தரப்பு தற்போதுச் சம்மதித்துள்ளது. இந்த அதிரடி முடிவின் மூலம், 'ஜனநாயகம்' படத்தின் சென்சார் சிக்கல்கள் விரைவில் தீர்க்கப்பட்டு, அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இதையும் படிங்க: "ஜனநாயகன்” பட சென்சார் வழக்கில் இன்று அதிரடி தீர்ப்பு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share