லாக் அப் மரணங்கள் ... உறவுகளை பறிக்கொடுத்தவர்களுக்கு விஜய் நேரில் ஆறுதல்
லாக் அப்பில் மரணம் அடைந்த 21 பேரின் குடும்பத்தினரை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
காவல் நிலைய விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கோவில் காவலாளி அஜித்குமார் மரணத்திற்கு நீதி கேட்டும், 24 காவல் நிலைய மரணங்கள் தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வலியுறுத்தியும் தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. ஏற்கனவே, பாஜக மற்றும் அதிமுக உள்ள கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்திய நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது. வேறு இடத்திலும் அல்லது வேறு தேதியிலோ மாற்றி வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறப்பட்டது. ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்க கோரி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அவசர வழக்காக எடுத்துக்கொள்ள நீதிபதிகள் மறுத்துவிட்டனர். இந்த நிலையில் நாளை தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இந்த நிலையில், தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் காவல் நிலையத்தில் மரணம் அடைந்தவர்களின் குடும்பத்தினரை தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் சந்திக்க உள்ளதாக கூறப்பட்டது. காவல் நிலைய மரணங்களால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை வரும் சனி அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் விஜய் சந்திக்க இருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில், சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக அலுவலகத்திற்கு லாக் அப்பில் மரணம் அடைந்த 21 பேரின் குடும்பத்தினர் வந்திருந்தனர். லாக் அப்பில் மரணம் அடைந்த புதுக்கோட்டை சின்னதுரை, அருப்புக்கோட்டை தங்கபாண்டி, விழுப்புரம் ராஜா, அற்புதராஜ், திருவண்ணாமலை தங்கமணி, தர்மபுரி செந்தில், விருதுநகர் ஜெயக்குமார், புளியங்குடி தங்கசாமி மதுரை கார்த்தி, அயனாவரம் ஆகாஷ், கடலூர் பாஸ்கர், ராமநாதபுரம் பாலகுமார், திருச்சி திராவிட மணி, அரியலூர் முருகானந்தம், புதுக்கோட்டை விக்னேஸ்வரன் ஆகியோர் குடும்பத்தினரை விஜய் சந்தித்து ஆறுதல் கூறினார்.
இதையும் படிங்க: ஆட்டம் சூடு பிடிக்க போகுது.. ரெடியா இருடே! விஜயின் தரமான அடுத்த நகர்வு..!
இதையும் படிங்க: முழுக்க முழுக்க காவல்துறை அராஜகத்தால் நடந்த "கொலை"! முதல்வர் பதில் சொல்லியே ஆக வேண்டும்.. இபிஎஸ் கொந்தளிப்பு..!