முழுக்க முழுக்க காவல்துறை அராஜகத்தால் நடந்த "கொலை"! முதல்வர் பதில் சொல்லியே ஆக வேண்டும்.. இபிஎஸ் கொந்தளிப்பு..!
இளைஞர் அஜித்குமார் கொலை வழக்கில் சிபிசிஐடி விசாரணையின் மீது நம்பிக்கை இல்லாததால் வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியைச் சேர்ந்தவர் அஜித்குமார். இவர் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் காவலாளியாக பணியாற்றி வந்தார். நகை திருட்டு தொடர்பாக அஜித்குமார் மீது புகார் கொடுக்கப்பட்ட நிலையில் அவரை போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். போலீசார் தாக்கியதில் அஜித் குமார் உயிரிழந்தார். இந்த வழக்கு தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள நீதிமன்றம், அஜித் குமார் என்ன தீவிரவாதியா அடித்துக் கொன்று உள்ளீர்கள் என கேள்வி எழுப்பியது.
தொடர்ந்து, இளைஞர் மரண வழக்கில் கைதான 5 காவலர்களையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி வெங்கடேஷ் பிரசாத் உத்தரவு பிறப்பித்துள்ளார். காவலர்கள் பிரபு. ஆனந்த், கண்ணன், ராஜா, சங்கரமணிகண்டன் ஆகியோ சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் மரண வழக்கு பிரேத பரிசோதனை அடிப்படையில் கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டது. வழக்கு தொடர்பாக 6 காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் 5 காவலர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. காவல்துறை பதிவு செய்த எஃப் ஐ ஆரில் அஜித்குமார் வலிப்பு ஏற்பட்ட உயிரிழந்ததாக பதிவு செய்யப்பட்டுள்ளதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: "லாக் அப் டெத்" ...விளைவு மோசமா இருக்கும்! முதல்வர் ஸ்டாலின் வார்னிங்!
திருப்புவனம் காவல் மரணத்தில் உயிரிழந்த அஜித்குமார் பிரேத பரிசோதனை அறிக்கை குறித்த செய்திகளில், உச்சந்தலை முதல் கால்கள் வரை 18 காயங்கள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிப்பதாக கூறியுள்ளார். மேலும், கழுத்துப் பகுதியில் கொடுக்கப்பட்ட பெரும் அழுத்தம் காரணமாகவே உயிரிழப்பு ஏற்பட்டதாக சொல்லப்படுவதாகவும், இது முழுக்க முழுக்க ஸ்டாலின் அரசின் காவல்துறை அராஜகத்தால் நடந்த கொலை என்றும் தெரிவித்தார்.
ஸ்டாலின் ஆட்சியில் நடந்த 25 காவல் மரணங்களும் அப்பட்டமான மனித உரிமை மீறல் என கூறியுள்ள எடப்பாடி பழனிச்சாமி, இதனை தேசிய மனித உரிமைகள் ஆணையம் முன்வந்து விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். இந்த நிலையில், அஜித்குமார் உயிரிழந்ததற்கு காரணம் வலிப்பு என FIR பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும், Deja Vu எல்லாம் இல்லை, விக்னேஷ் லாக்கப் மரணத்தின் போது ஸ்டாலின் எந்த பச்சைப்பொய்யை சட்டப்பேரவையில் கூச்சமின்றி சொன்னாரோ, அதே பொய்யை அப்படியே அஜித்குமாருக்கு மீண்டும் சொல்கிறது ஸ்டாலினின் காவல்துறை என சாடினார். நீங்கள் இப்படியெல்லாம் தில்லுமுல்லு செய்வீர்கள் எனத் தெரிந்து தான், தனது அறிவுறுத்தலின்படி, மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனைவரும் #JusticeForAjithkumar பதாகைகளை ஏந்தி, நீதிக்கான குரலாக ஒலித்தனர் என்றும் தெரிவித்தார்.
நாடு முழுக்க #JusticeForAjithkumar #NationWithAjith என பெரும் அதிர்வலைகளை இச்சம்பவம் ஏற்படுத்தியுள்ளது என்றும் இதற்கு பதில் சொல்ல வேண்டிய முதல்வர் ஸ்டாலின் எங்கே ஒளிந்துக் கொண்டிருக்கிறார் எனவும் கேள்வி எழுப்பினார். CBCID விசாரணையில் மக்களுக்கும் தங்களுக்கும் துளிகூட நம்பிக்கை இல்லை என்பதால் வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்றும் தறிகெட்ட ஆட்சியில் தமிழ்நாட்டு மக்கள் தவித்து வருவதாகவும் தெரிவித்தார். இக்கொலைக்கு காவல்துறைக்கு பொறுப்பான பொம்மை முதல்வர் முழு பொறுப்பேற்று, பதில் அளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள எடப்பாடி பழனிச்சாமி, வீடியோ ஷூட் செய்ய எவ்வளவு நேரம் ஆகும் என்றும் பதிலுக்காக காத்திருப்பதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அடிச்சு கொன்னுட்டீங்களே... அவரு என்ன தீவிரவாதியா? தமிழக அரசுக்கு கோர்ட் சரமாரி கேள்வி..!