×
 
☰

திறமையை வளர்த்தால் பெற்றோர் கனவு நனவாகும்: காயிதே மில்லத் பட்டமளிப்பில் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர்!

சென்னை மேடவாக்கம் தி காயிதே மில்லத் ஆடவர் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் 864 மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கி உத்வேக உரையாற்றினார்.

ஒவ்வொரு மாணவருக்குள்ளும் ஒரு தனித்துவமான திறமை ஒளிந்திருக்கும் என்றும், முதல் மதிப்பெண் எடுப்பதோ அல்லது முதல் மாணவராக வருவதோ மட்டுமே வெற்றிக்கு அடையாளமல்ல; மதிப்பெண் குறைவாக இருந்தாலும் தங்களிடம் உள்ள உள்ளார்ந்த திறமையைக் கண்டறிந்து கடினமாக உழைத்தால் பெற்றோரின் கனவுகளை நிச்சயம் நனவாக்க முடியும் என்றும் தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் மாணவர்களிடையே எழுச்சியுரை ஆற்றினார்.

சென்னை மேடவாக்கத்தில் உள்ள புகழ்பெற்ற தி காயிதே மில்லத் ஆடவர் கல்லூரியின் 43-வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. கல்லூரித் தாளாளர் எம்.ஜி. தாவூத் மியாகான் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவர் (சபாநாயகர்) ஜே.சி.டி பிரபாகர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். விழாவில் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளை வெற்றிகரமாக நிறைவு செய்த 864 மாணவ, மாணவிகளுக்குப் பட்டங்களையும், தரவரிசையில் சிறப்பிடம் பிடித்த மாணவச் செல்வங்களுக்குத் தங்கப்பதக்கங்களையும் அவர் வழங்கிச் சிறப்பித்தார்.

பட்டமளிப்பு விழாவில் மாணவர்களிடையே சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் ஆற்றிய  உரையில் கூறியதாவது, 

"பட்டங்களை வாங்கும் மாணவர்கள் தங்களின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் குடும்ப நலம் என்ற சுயநல எல்லைகளைத் தாண்டி, ஒட்டுமொத்த சமூக முன்னேற்றத்திற்கும் பங்களிக்கக்கூடிய சிந்தனைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். பிறருக்கு ஒரு முன்மாதிரியாகவும், வழிகாட்டும் கலங்கரை விளக்கமாகவும் மாணவர்கள் திகழ வேண்டும்.

இதையும் படிங்க: சிவகங்கையில் பழிக்கு பழி கொலை: ரவுடி சுள்ளான் மதன் ஓட ஓட விரட்டி வெட்டி கொலை!

 

நம் நாட்டின் அடிப்படைத் தூண்களான ஜனநாயகத்தையும், மதச்சார்பின்மையையும் தங்களது இரு கண்களைப் போலப் போற்றிப் பாதுகாக்க வேண்டும். வேற்றுமையில் ஒற்றுமை காணும் நமது தேசத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்குப் புதிய பட்டதாரிகள் மனிதநேயப் பண்புடன் பாடுபட முன்வர வேண்டும்.

ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஓர் அசாத்தியமான திறமை ஒளிந்திருக்கிறது. வகுப்பில் முதல் மதிப்பெண் பெறுபவரோ அல்லது முதல் மாணவராக வருபவரோ மட்டுமே வாழ்வில் சாதிப்பார்கள் என்பது கிடையாது. கல்விப் பருவத்தில் மதிப்பெண்கள் குறைவாகப் பெற்றிருந்தாலும் கூட, உங்களிடம் இயற்கையாகவே ஒளிந்திருக்கும் தனித்திறமை என்ன என்பதைக் கண்டறிந்து, அதில் முழு அர்ப்பணிப்புடன் உழைத்தால், உங்களை ஆளாக்கி வளர்த்தெடுத்த பெற்றோரின் கனவுகளை நிச்சயம் நனவாக்க முடியும்" என்று நம்பிக்கையூட்டும் வகையில் பேசினார்.

முன்னதாகப் பேசிய கல்லூரியின் தாளாளர் எம்.ஜி. தாவூத் மியாகான், கடந்த 1975-ஆம் ஆண்டு இக்கல்லூரிக்காக அரசு நிலம் ஒதுக்கீடு செய்தபோதிலும், அதன் வகைப்பாடு (Land Classification) இதுவரை முறையாக மாற்றித் தரப்படவில்லை என்பதைக் குறிப்பிட்டார். இதன் காரணமாகக் கல்லூரி நிர்வாகம் பல்வேறு நிர்வாகச் சிக்கல்களையும் இன்னல்களையும் தொடர்ந்து சந்தித்து வருவதைச் சுட்டிக்காட்டிய அவர், தற்போதைய அரசு உடனடியாக தலையிட்டு நிலத்தின் வகைப்பாட்டை மாற்றித் தந்து கல்விப் பணிக்கு உதவ வேண்டும் என்று மேடையிலேயே சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகரிடம் அதிகாரப்பூர்வ கோரிக்கை மனுவை அளித்தார்.

 

 

 

இதையும் படிங்க: வெளிச்சந்தையில் மின்சாரம் கொள்முதல்: 7,000 மெகாவாட் மின்சாரத்திற்கு 3-வது டெண்டர் கோரியது மின்சார வாரியம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share