மலைப்பகுதிகளில் பிளாஸ்டிக் பால் பாக்கெட்களுக்கு தடை? ஆவின் நிறுவனத்திற்கு உயர் நீதிமன்றம் கெடு!
மலைப்பகுதிகளில் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்கும் நோக்கில், பிளாஸ்டிக் பாக்கெட்டுகளுக்குப் பதிலாகப் பாலை விநியோகிக்க மாற்று வழிகளைக் கண்டறிந்து அறிக்கை தாக்கல் செய்ய ஆவின் நிறுவனத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நீலகிரி மற்றும் கொடைக்கானல் போன்ற சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த மலைப்பகுதிகளில் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்கும் நோக்கில், சென்னை உயர் நீதிமன்றம் இன்று மிக முக்கியமான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. குறிப்பாக, பிளாஸ்டிக் பால் பாக்கெட்களுக்கு மாற்றாக ஆவின் நிறுவனம் எடுக்கவுள்ள நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
நீதிபதி என். சதீஷ்குமார் மற்றும் டி. பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அதில், பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களுக்குத் தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பல நிறுவனங்கள் டெட்ரா பாக்கெட்களில் குடிநீரை விற்பனை செய்யத் தொடங்கியுள்ளன. இதுகுறித்து அதிருப்தி வெளியிட்ட நீதிபதிகள், "டெட்ரா பாக்கெட்கள் என்பவை பிளாஸ்டிக் பாட்டில்களை விட அதிக அபாயகரமானவை; அவற்றை மறுசுழற்சி செய்வது கடினம். எனவே, டெட்ரா பாக்கெட்களுக்கும் இந்தத் தடை பொருந்தும்" எனத் தெளிவுபடுத்தினர்.
மலைப்பகுதிகளில் டெட்ரா பாக்கெட்களில் குடிநீர் விற்பனை செய்யும் கடைகளைக் கண்டறிந்து அவற்றைப் பறிமுதல் செய்யவும், விதிகளை மீறும் கடைகளுக்குச் சீல் வைக்கவும் அதிகாரிகளுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: பாமக மோதல்.... தேர்தல் தேதியை தள்ளி வைக்க கோரி ராமதாஸ் வழக்கு நாளை விசாரணை!
நீலகிரி மாவட்டத்தில் மட்டும் நாளொன்றுக்கு சுமார் 60 லட்சம் பிளாஸ்டிக் பால் பாக்கெட்கள் புழக்கத்திற்கு வருவதாக நீதிமன்ற உதவியாளர்கள் சுட்டிக்காட்டினர். முன்னதாக, பிளாஸ்டிக் பாக்கெட்களுக்குப் பதிலாகக் கண்ணாடி பாட்டில்களில் பால் விநியோகம் செய்ய டெண்டர் கோரப்பட்டுள்ளதாக ஆவின் நிறுவனம் தெரிவித்திருந்தது.
ஆவின் நிறுவனம் தனது வாக்குறுதியைச் செயல்படுத்தி, பிளாஸ்டிக் பாக்கெட்களுக்கு மாற்றான பாதுகாப்பான வழிமுறைகள் குறித்து விரிவான ஆய்வு அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையைத் தள்ளிவைத்தனர்.
மலைப்பகுதிகளில் சேரும் பிளாஸ்டிக் கழிவுகள் வனவிலங்குகளின் உயிருக்கும், மண்ணின் வளத்திற்கும் பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வருகின்றன. இந்த நிலையில், அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆவின் நிறுவனமே கண்ணாடி பாட்டில்களுக்கு மாறினால், அது பிளாஸ்டிக் ஒழிப்புப் போராட்டத்தில் ஒரு மிகப்பெரிய மைல்கல்லாக அமையும் எனச் சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர்.
இதையும் படிங்க: அதிமுக எம்பி சி.வி.சண்முகம் மீதான வழக்கு ரத்து..! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!