கோவிலுக்குத் துரோகம் செய்கிறீர்கள்.. அறநிலையத்துறை அதிகாரிகளை வெளுத்து வாங்கிய சென்னை உயர்நீதிமன்றம்!
கோவில் சொத்துக்களைக் காக்கவே சம்பளம் வழங்கப்படுகிறது ஆனால், நீங்கள் துரோகம் செய்கிறீர்கள் என்று அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
கோவில் சொத்துக்களைப் பாதுகாப்பதில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் காட்டும் மெத்தனப் போக்கைக் கண்டித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், கடமையைச் செய்யத் தவறும் அதிகாரிகள் கோவிலுக்குத் துரோகம் செய்வதாகக் காட்டமாகக் குறிப்பிட்டுள்ளது. சேலம் ஓமலூர் கண்ணனூர் மாரியம்மன் கோவிலுக்குச் சொந்தமான கனிம வளங்கள் சூறையாடப்பட்ட விவகாரத்தில் நீதிமன்றம் இந்த அதிரடி விமர்சனங்களை முன்வைத்துள்ளது.
சேலம் மாவட்டம் ஓமலூர் கண்ணனூர் மாரியம்மன் கோவிலுக்குச் சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டதோடு, அங்கிருந்த கனிம வளங்கள் சட்டவிரோதமாகக் கொள்ளையடிக்கப்பட்டதாகச் சேலத்தைச் சேர்ந்த ஆ. இராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கினை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் சி. குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வு, சேலம் மண்டல அறநிலையத்துறை இணை ஆணையரை நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தது. அதன்படி, இணை ஆணையர் வே. சபர்மதி இன்று நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.
இதையும் படிங்க: கூட்டணி குறித்து தலைவர் தான் முடிவெடுப்பார்! சேலத்தில் புஸ்ஸி ஆனந்த் பேட்டி!
அதிகாரிகளின் அலட்சியப் போக்கைக் கண்டு ஆவேசமடைந்த நீதிபதிகள், "கோவில் சொத்துக்களைப் பாதுகாப்பதற்காகத்தான் அரசாங்கம் உங்களுக்குச் சம்பளம் வழங்குகிறது. ஆனால், அந்தப் பணியைச் சரிவரச் செய்யாமல், கோவிலுக்குத் துரோகம் செய்கிறீர்கள்" என நேரிடையாகவே சாடினர்.
அதிகாரிகளின் இத்தகைய அலட்சியத்தால் ஏராளமான கோவில் சொத்துக்கள் பறிபோயுள்ளதாகத் தெரிவித்த நீதிபதிகள், இதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தனர். மேலும், இந்தக் கனிம வளக் கொள்ளையில் சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து உரிய இழப்பீட்டை வசூலிக்க வேண்டும் என்றும், பணியில் கவனக்குறைவாக இருந்த அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதிரடி உத்தரவு பிறப்பித்தனர்.
கோவில் நிலங்களை மீட்பதில் அறநிலையத்துறை காட்டும் தாமதம் மற்றும் கனிம வளக் கொள்ளை விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தின் இந்தத் தலையீடு, ஆன்மீக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: சேலம் மாநாட்டிற்கு தயாராகும் விஜய்! இன்று தவெக நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை!