கரகாட்டம் பெயரில் ஆபாசமா? போலீசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!
கரகாட்டத்தில் ஆபாச உடைகள் இருந்தால் நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தற்போது கரகாட்டக் கலைஞர்கள் அணியும் உடைகள் மிகவும் ஆபாசமாக மாறிவிட்டன என்று சென்னை உயர் நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது. அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தில் உள்ள பாப்பாத்தம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு கரகாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி வழங்கும்படி விழாக் குழுவினர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் நீதிபதி வி. லட்சுமிநாராயணன் இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.உடையார்பாளையம் காவல் நிலையத்தினர் இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்திருந்தனர். ஆபாச நடனங்கள் நடைபெற வாய்ப்புள்ளது என்பதோடு அரசியல் சார்ந்த கோஷங்களும் எழுப்பப்படலாம் என்பதே அவர்களது காரணமாக இருந்தது.
இதற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டபோது நீதிபதி, தற்போதெல்லாம் கரகாட்டம் ஆடும் பெண்களின் உடைகள் மிகவும் ஆபாசமாக உள்ளன என்றும், தமிழ்நாட்டைவிட ஆந்திர மாநிலத்தில் நிலைமை இன்னும் மோசமாக இருக்கிறது என்றும் கவனித்தார். அப்படியிருக்கும்போது கரகாட்டத்தை எப்படி அனுமதிப்பது என்று கேள்வி எழுப்பினார்.அரசியல் பேசுவதற்கு உடையார்பாளையம் உள்ளிட்ட நாடு முழுவதும் உரிமை உள்ளது என்றும், ஆனால் ஆபாச நடனத்திற்கு மட்டும் அனுமதி வழங்க முடியாது என்றும் நீதிபதி தெளிவுபடுத்தினார். மனுதாரர் தரப்பில், கரகாட்டம் காலம் காலமாக கிராமப்புறங்களில் நடைபெற்று வரும் பாரம்பரிய கலை நிகழ்ச்சி என்றும், அதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் வாதிடப்பட்டது.
அண்டை கிராமத்தில் ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு நிபந்தனைகளுடன் உயர் நீதிமன்றம் இதற்கு முன் அனுமதி அளித்ததை சுட்டிக்காட்டி அந்த உத்தரவின் நகலும் சமர்ப்பிக்கப்பட்டது.இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இன்று தொடங்கவுள்ள உடையார்பாளையம் பாப்பாத்தம்மன் கோயில் திருவிழாவிலும் நிபந்தனைகளுடன் கரகாட்டத்திற்கு அனுமதி வழங்குவதாக உத்தரவிட்டார். அதே நேரத்தில் கடுமையான எச்சரிக்கையும் விடுத்தார். கரகாட்டம் ஆடும் கலைஞர்கள் ஆபாச உடை அணிந்து நடனமாடினால் உடையார்பாளையம் காவல் நிலையத்தினர் சட்டப்படி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆபாசமாக ஆடியதற்கான ஆதாரங்களை சேகரித்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
இதையும் படிங்க: சூடுபிடிக்கும் நில அபகரிப்பு வழக்கு..! MR விஜயபாஸ்கர் ஆஜர்... துருவி துருவி விசாரணை..!
அதன் அடிப்படையில் நீதிமன்றமே தானாக முன்வந்து அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் என்று நீதிபதி உத்தரவில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.இந்த உத்தரவு, பாரம்பரிய கலையைப் பாதுகாக்கும் அதே வேளையில் அதில் புகுந்துள்ள ஆபாசப் போக்கைத் தடுக்கும் நோக்கத்துடன் பிறப்பிக்கப்பட்டுள்ளது. கரகாட்டம் போன்ற நாட்டுப்புறக் கலைகள் கோயில் திருவிழாக்களில் இடம்பெறும்போது அவை மரியாதைக்குரிய முறையிலும் பாரம்பரியத்திற்கு ஏற்றவாறும் நடைபெற வேண்டும் என்பதே நீதிமன்றத்தின் அணுகுமுறையாகத் தெரிகிறது.
இதையும் படிங்க: அரசு வழக்கறிஞர் நியமனம்... லஞ்ச குற்றச்சாட்டுக்கு முற்றுப்புள்ளி..! வழக்கு முடித்து வைப்பு..!!