ரூ.6.39 கோடியை திரும்பப் பெற வேண்டும்: பழமை மாறா வளர்ச்சிக்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி!
திருவண்ணாமலை கோவில் ராஜகோபுரம் எதிரே வணிக வளாகம் கட்டும் அரசாணை வாபஸ் பெறப்பட்டதை அடுத்து, வழங்கப்பட்ட ரூ.6.39 கோடியைத் திரும்பப் பெற உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலின் கிழக்கு ராஜகோபுரம் எதிரில் வணிக வளாகம் கட்டுவதற்காகப் பொதுப்பணித் துறைக்கு வழங்கப்பட்ட ரூ.6.39 கோடி நிதியை மீண்டும் கோவில் நிர்வாகத்திற்குத் திரும்பப் பெறச் சென்னை உயர் நீதிமன்றம் இந்து சமய அறநிலையத் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் கிழக்கு ராஜகோபுரத்தின் எதிரே வணிக வளாகம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அப்பகுதியின் புராதனத் தன்மையைப் பாதுகாக்கக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இவ்வழக்கு விசாரணையின் போது, வணிக வளாகம் கட்டுவது தொடர்பாக முன்னதாகப் பிறப்பிக்கப்பட்ட அரசாணையைத் திரும்பப் பெற்றுக்கொண்டதாகத் தமிழக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அரசாணை வாபஸ் பெறப்பட்டதை ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்றம், இது தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை முடித்து வைத்தது. மேலும், வணிக வளாகக் கட்டுமானப் பணிகளுக்காகப் பொதுப்பணித் துறைக்கு அளிக்கப்பட்ட ரூ.6.39 கோடி தொகையைக் கோவில் கணக்கிற்கு உடனடியாகத் திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறநிலையத் துறைக்கு உத்தரவிட்டது.
இதையும் படிங்க: "மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகை!" - திருவண்ணாமலையில் 2 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்கத் தடை!
இதனைத் தொடர்ந்து, கோவிலில் பக்தர்களின் கூட்ட நெரிசலைச் சீராக முறைப்படுத்துவது மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது தொடர்பாகப் புராதனச் சின்ன ஆணையம் அளித்துள்ள பரிந்துரைகளைப் பரிசீலித்து, விரைந்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்து சமய அறநிலையத் துறைக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தி. மலையில் அரசு பேருந்தில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு..! சிக்கிய 5 பேர்... தீவிர விசாரணை..!!