நள்ளிரவில் நடந்த கோரம்... நேருக்கு நேர் மோதி சில்லு சில்லாய் நொறுங்கிய பேருந்துகள்... 5 பேர் துடிதுடித்து பலி...!
மதுரை மேலூர் அருகே அரசு பேருந்தும் ஆம்னி பேருந்தும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே வஞ்சி நகர் பகுதியில் உள்ள நான்கு வழிச்சாலையில், சென்னையிலிருந்து மார்த்தாண்டம் நோக்கி பயணிகளுடன் சென்று கொண்டிருந்த ஆம்னி பேருந்து, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததாகக் கூறப்படுகிறது.
அப்போது, எதிர்திசையில் மதுரையிலிருந்து திருச்சி நோக்கி பயணிகளுடன் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தின் மீது ஆம்னி பேருந்து நேருக்கு நேர் மோதியது. மோதலின் வேகத்தில், ஆம்னி பேருந்து மீண்டும் சாலையின் இடதுபுறமாகச் சென்று, சாலையோரத்தில் இருந்த பயணிகள் நிழற்குடையிலும் மோதியது. இதனால் அந்த நிழற்குடை முழுவதுமாக சேதமடைந்தது.
இந்த விபத்தில், இரண்டு பேருந்துகளிலும் பயணித்த நான்கு ஆண்கள் மற்றும் ஒரு பெண் என மொத்தம் 5 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து..! 32 இந்தியர்களின் நிலை என்ன..? கதி கலங்கவைக்கும் சம்பவம்..!
மேலும், 41 பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் மேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவ இடத்திற்கு மதுரை சரக டிஐஜி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (எஸ்பி) உள்ளிட்ட உயர் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டதுடன், மீட்புப் பணிகளை விரைவுபடுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளனர்.
தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர், நெடுஞ்சாலைத் துறையினர் மற்றும் ரோந்து போலீசார் இணைந்து மீட்புப் பணிகளையும், சாலையை சீரமைக்கும் பணிகளையும் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
நள்ளிரவில் நிகழ்ந்த இந்த கோர விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தற்போது சேதமடைந்த வாகனங்கள் அகற்றப்பட்டு, சாலை சீரமைக்கப்பட்டு, போக்குவரத்து படிப்படியாக சீரமைக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: மனவேதனை..! கடலூரில் கோரவிபத்து...! உயிரிழந்தவர்களுக்கு ரூ.3 லட்சம் நிவாரணம்... முதல்வர் விஜய் அறிவிப்பு..!!