#BREAKING காலையிலேயே அதிபயங்கரம்... அப்பளம் போல் நொறுங்கிய கார்... 3 வயது குழந்தை உட்பட 5 பேர் உயிரிழப்பு...!
மதுரை மேலூர் அருகே 4 வழிச்சாலையில் நடந்த சாலை விபத்தில் 5 பேர் உயிரிழப்பு
மதுரை மாவட்டம் மேலூர் அருகே தும்பைப்பட்டி – நான்கோணி மேம்பாலம் பகுதியில் இன்று அதிகாலை இந்த விபத்து நடைபெற்றுள்ளது.
சென்னையிலிருந்து திருநெல்வேலி நோக்கி சென்ற காரில் மூன்று ஆண்கள், இரண்டு பெண்கள் மற்றும் 3 வயது குழந்தை என மொத்தம் 6 பேர் பயணம் செய்து கொண்டிருந்தனர்.
அவர்கள் தும்பைப்பட்டி மேம்பாலம் அருகே வந்தபோது, முன்னால் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது கார் எதிர்பாராத விதமாக மோதியது. இதனால், கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் நடுவே இருந்த தடுப்பைக் கடந்து, மதுரையிலிருந்து திருச்சி நோக்கி வந்த சாலைக்குள் புகுந்து, எதிரே வந்த மற்றொரு கார் மீது மோதியது.
இந்த விபத்தில், சென்னையிலிருந்து வந்த கார் இரண்டு முறை கவிழ்ந்து, பின்னர் எதிரே வந்த கார் மீது மோதியதால் முற்றிலும் சேதமடைந்தது.
இந்த விபத்தில், காரில் பயணம் செய்த ஸ்ரீராம், ராஜகுமாரி, ரஞ்சனா உள்ளிட்ட இரண்டு ஆண்கள், இரண்டு பெண்கள் மற்றும் 3 வயது குழந்தை பிரணிகா ஆகிய 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும், சென்னையிலிருந்து வந்த காரில் பயணம் செய்த ஒருவர் மற்றும் எதிரே வந்த காரில் பயணம் செய்த மற்றொருவர் என இருவர் பலத்த காயமடைந்தனர். அவர்களை மேலூர் காவல்துறையினர், தீயணைப்புத் துறையினர் மற்றும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மீட்டு, மேலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தால் அப்பகுதியில் சில மணி நேரம் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதிகாலை நேரத்தில் நிகழ்ந்த இந்த கோர விபத்து அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தென் தமிழகத்தை புறக்கணிக்காதீர்கள்! பட்ஜெட்டில் சிறப்பு நிதி கேட்கும் 11 மாவட்ட தொழில் சங்கங்கள்!!
காலையிலேயே கோர விபத்தில் 5 பேர் உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் மதுரை மக்களை பெரும் சோகத்திற்குள்ளாக்கியுள்ளது.
இதையும் படிங்க: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சொத்து மோசடி... முக்கிய அதிகாரிகளுக்கு செக்... இறங்கி அலசும் மத்திய குற்றப்பிரிவு போலீஸ்...!