இயற்கை வள சுரண்டலை வேடிக்கை பார்க்க முடியாது! மதுரை மாவட்ட ஆட்சியருக்கு நீதிபதிகள் எச்சரிக்கை!
மதுரை மேலூர் பகுதியில் சட்டவிரோத மணல் குவாரிகளுக்குத் தடை விதித்துள்ள உயர்நீதிமன்ற மதுரை கிளை, நடவடிக்கை எடுக்கத் தவறினால் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆஜராக நேரிடும் என எச்சரித்துள்ளது.
மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சட்டவிரோதமாகச் செயல்பட்டு வரும் மணல் குவாரிகளின் செயல்பாடுகளுக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவிட்டுள்ளது. மேலூர் பகுதியைச் சேர்ந்த மனுதாரர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சி.வி. கார்த்திகேயன் மற்றும் சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
மேலூர், திருவாதவூர், இடையபட்டி, கிடாரிப்பட்டி, பொய்கைகரைப்பட்டி, இலஞ்சிப்பட்டி, சத்திரப்பட்டி ஆகிய பகுதிகளில் அரசு புறம்போக்கு நிலங்கள் மற்றும் கண்மாய்களில் எவ்வித அனுமதியுமின்றிச் சட்டவிரோதமாக மணல் அள்ளப்பட்டு வருகிறது. 30 அடிக்கும் மேலாக மண் தோண்டப்பட்டதால் நிலத்தடி நீர்மட்டம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அழகர்மலை வனப்பகுதியிலிருந்து வரும் ஓடைகள் முற்றிலும் அழிக்கப்பட்டு, விவசாயத்திற்கு நீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கனிமவளத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளின் துணையுடன் போலி அனுமதிச் சீட்டுகளைப் பயன்படுத்தி தினமும் 250-க்கும் மேற்பட்ட லாரிகளில் மணல் கடத்தப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், போலிச் சீட்டுகள் மூலம் மணல் அள்ளியவர்கள் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டது.
இதையும் படிங்க: மகளிருக்கு இலவச பயணம் இருக்கும் போது சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு ஏன் இல்லை? உயர் நீதிமன்றம் கேள்வி!
வழக்கு விசாரணையின் போது, மனுதாரர் தரப்பில் மணல் திருட்டு தொடர்பான ட்ரோன் புகைப்படங்கள் மற்றும் வீடியோ ஆதாரங்கள் நீதிபதிகளிடம் சமர்ப்பிக்கப்பட்டன. இவற்றை ஆய்வு செய்த நீதிபதிகள் அரசுத் தரப்பிற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். இவ்வளவு கனரக லாரிகள் மற்றும் ஜேசிபி இயந்திரங்களைப் பயன்படுத்தி மணல் அள்ளுவது எப்படி அனுமதிக்கப்படுகிறது? காவல்துறையிடம் புகார் செய்தால் வருவாய்த்துறையைக் காட்டுவதும், இருவரிடமும் புகார் செய்தால் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதுமே தொடர்கதையாக உள்ளது.
இயற்கை வளங்கள் சுரண்டப்படுவதை நீதிமன்றம் இனியும் கண்மூடிக்கொண்டு வேடிக்கை பார்க்காது. மேலூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இயங்கும் அனைத்துச் சட்டவிரோத மணல் குவாரிகளின் செயல்பாடுகளுக்கும், மணல் அள்ளும் நடவடிக்கைகளுக்கும் உடனடியாக இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. மாவட்ட ஆட்சியர் நேரடியாகத் தலையிட்டு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும்பட்சத்தில் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும்.
நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றியது குறித்து மாவட்ட ஆட்சியர், கனிமவளத்துறை மற்றும் காவல்துறையினர் வரும் ஜூலை 30-ஆம் தேதிக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இடைப்பட்ட காலத்தில் மீண்டும் மணல் திருட்டு நடைபெற்றால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: இனி ஆயுசுக்கும் ஜெயில்தான்! காசியின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது ஹைகோர்ட்!