மதுரை மேயருக்கு எதிராக போர் கொடி! பதவி விலகும் வரை இதை செய்யமாட்டோம்... அதிமுக திட்டவட்டம்
மதுரை மேயர் இந்திராணி பதவி விலகும் வரை மாமன்ற கூட்டத்தில் அதிமுக பங்கேற்காது என செல்லூர் ராஜு திட்டவட்டமாக தெரிவித்தார்.
மதுரை மாநகராட்சியில் சொத்து வரி முறைகேடு தொடர்பாக மேயர் இந்திராணி பொன் வசந்த் மீது எழுந்த குற்றச்சாட்டுகள் தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த விவகாரம், மதுரை மாநகராட்சியில் நடந்த ரூ.150 கோடி முதல் ரூ.200 கோடி வரையிலான சொத்து வரி முறைகேடு குறித்து மையமாகக் கொண்டது. இந்த ஊழல் புகார் முதன்முதலில் 2024 ஆம் ஆண்டு மதுரை மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தில், அதிமுக எதிர்க்கட்சித் தலைவர் சோலைராஜா தலைமையில் கவுன்சிலர்களால் எழுப்பப்பட்டது.
மதுரை மாநகராட்சியில் சொத்து வரி மதிப்பீட்டில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகார்கள், முக்கியமாக தனியார் கட்டடங்களுக்கு வரி குறைவாக நிர்ணயிக்கப்பட்டதை மையமாகக் கொண்டவை. இந்த முறைகேடு மூலம் மாநகராட்சிக்கு சுமார் ரூ.150 கோடி முதல் ரூ.200 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. மாநகராட்சியின் ஆன்லைன் வரி வசூல் முறையில், அதிகாரிகளின் கடவுச்சொற்களைப் பயன்படுத்தி, சிலர் சொத்து வரியை முறைகேடாகக் குறைத்து நிர்ணயித்ததாக விசாரணையில் தெரியவந்தது.
இந்த விசாரணையில், மண்டலம் 3 இல் அதிக அளவில் முறைகேடு நடந்ததாக உறுதிப்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ஓய்வு பெற்ற உதவி ஆணையர் ரங்கராஜன், உதவி வருவாய் அலுவலர் செந்தில் குமார், மண்டலம் 3 தலைவரின் நேர்முக உதவியாளர் தனசேகரன் உள்ளிட்ட 8 பேர் முதற்கட்டமாக கைது செய்யப்பட்டனர். மேலும், 19 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். விசாரணையில், மேயர் இந்திராணியின் கணவர் பொன் வசந்த் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி உதவி ஆணையர் சுரேஷ்குமார் ஆகியோருக்கும் இந்த முறைகேட்டில் தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகின.ஆகஸ்ட் 12 அன்று, மேயர் இந்திராணியின் கணவர் பொன் வசந்த் சென்னையில் தனிப்படை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
இதையும் படிங்க: ஆயிரம் பேர்ல 600 பேர் திமுக தான்... இபிஎஸ்-க்கு அமைச்சர் முத்துசாமி தக்க பதிலடி..!
இந்த நிலையில் மதுரை மேயர் இந்திராணி பதவி விலகும் வரை மாமன்ற கூட்டத்தில் அதிமுக பங்கேற்காது என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அறிவித்துள்ளார். மேயர் இந்திராணி மீது குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுவதாகவும் ஊழல் செய்தவர் நடத்தும் கூட்டங்களில் பங்கேற்க முடியாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: எல்லாம் சரி... தரமா இருக்கா முதல்வரே? காலை உணவு திட்டத்தை விமர்சித்த அதிமுக..!