மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நில மோசடி வழக்கில் அடுத்த திருப்பம்... மேலும் ஒருவரை தட்டித்தூக்கிய காவல்துறை...!
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நில பத்திரப்பதிவு மோசடி வழக்கில் மேலும் ஒருவர் கைது
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான சுமார் 60 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை மோசடியாக பத்திரப்பதிவு செய்து, பட்டாவை தனியார் பெயர்களுக்கு மாற்றியதாகக் கூறப்படும் வழக்கில் வட்டாட்சியர் உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மதுரை சோழிக்குளம் பகுதியில், தல்லாகுளம்–அழகர்கோவில் சாலைக்கு அருகே கோயிலுக்குச் சொந்தமான அசோகா வில்லாஸ் பங்களா மற்றும் சுமார் இரண்டு ஏக்கர் தோட்டம் உள்ளிட்ட சொத்துகள் தொடர்பாக இந்த மோசடி நடைபெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலம் கடந்த 1930ஆம் ஆண்டு புதுக்கோட்டை மன்னர் டி.எம். துரைராஜாவின் மனைவி டி.எம். துரைராணி எழுதிய உயில் மூலம் கோயிலுக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. கோயில் வழிபாடு, அறப்பணிகள் மற்றும் கல்வி உதவித்தொகைகளுக்காக இந்த சொத்து பயன்படுத்தப்பட வேண்டும் என உயிலில் குறிப்பிடப்பட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆனால், கோயிலின் அறக்கட்டளைச் சொத்தாக இருந்த இந்த நிலத்தின் உரிமை தொடர்பான பதிவுகள் வருவாய்த்துறை ஆவணங்களில் இருந்து சட்டவிரோதமாக நீக்கப்பட்டு, கடந்த 2016ஆம் ஆண்டு பட்டா தனியார் நபர்களின் பெயர்களுக்கு மாற்றப்பட்டதாக கோயில் நிர்வாகம் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'போலீஸ் சீருடையில் வந்தவர்கள் பணம் பறித்தனர்'! பாஜ மாநில செயலாளர் ராம. சீனிவாசன் பரபரப்பு புகார்!
இந்த விவகாரம் தொடர்பாக மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலின் இணை ஆணையரும் செயல் அலுவலருமான கே. செல்லத்துரை அளித்த புகாரின் அடிப்படையில், மதுரை மாநகர மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். கடந்த ஜூலை 25ஆம் தேதி மோசடி மற்றும் குற்றச் சதி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் மொத்தம் 19 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் முன்னாள் விஏஓ அரசன், முன்னாள் வட்டாட்சியர் அன்பழகன், முரப்பநாடு சார்பதிவாளர் அனந்தராமன், வடமதுரை சார்பதிவாளர் பிரசாந்த் சந்தன கருப்பன் உள்ளிட்ட வருவாய்த்துறை மற்றும் பதிவுத்துறை அதிகாரிகளின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில், மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் நடத்திய விசாரணையின் அடிப்படையில், புதுக்கோட்டையைச் சேர்ந்த ராஜ்குமார் மற்றும் உசிலம்பட்டியைச் சேர்ந்த இளையராஜா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து, மோசடியான பத்திரப்பதிவுக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் முன்னாள் வட்டாட்சியர் அன்பழகனும் கைது செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் இந்த வழக்கில் இதுவரை மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பத்திரப்பதிவுக்கு உதவியதாக திண்டுக்கல் சிறுமலை பகுதியைச் சேர்ந்த கலிகுமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காவல்துறையினரின் முதற்கட்ட தகவலின்படி, இந்த நிலத்தை மோசடியாகப் பதிவு செய்ததாகக் கூறப்படும் நபர்களே கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரை போலி ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக உறுதி செய்யப்படவில்லை என்றும், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நிலத்தின் உரிமை தொடர்பான பிரச்சினைகள் ஏற்கனவே வருவாய்த்துறை அதிகாரிகளின் முன்பும், நீதிமன்றத்திலும் நிலுவையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த விவரங்களை மறைத்து, கடந்த 2021ஆம் ஆண்டு பவர் ஆஃப் அட்டார்னி மற்றும் அடமானப் பத்திரங்கள் உள்ளிட்ட ஆவணங்கள் சார்பதிவாளர் அலுவலகங்கள் மூலம் பதிவு செய்யப்பட்டதாக கோயில் நிர்வாகம் புகார் அளித்துள்ளது.
கோயில் சொத்தாக இருந்த நிலத்தின் பெயர் மாற்றம், பட்டா மாற்றம் மற்றும் பத்திரப்பதிவு ஆகியவை எந்தெந்த அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் நடைபெற்றது என்பது குறித்து தற்போது மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மொத்தம் 19 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதால், அடுத்தகட்டமாக இந்த வழக்கில் மேலும் கைது நடவடிக்கைகள் நடைபெறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதையும் படிங்க: “அரசியலுக்கு வாங்க த்ரிஷா அக்கா” மதுரையில் பரபரப்பு போஸ்டர்! விஜய் அரசியலுக்கு பின் புதிய விவாதம்