தமிழுக்கு முக்கியத்துவம் தாங்க! மதுரை மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேக வழக்கில் விரைவில் முக்கிய தீர்ப்பு!
மதுரை மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கில் சமஸ்கிருதத்திற்கு இணையாகத் தமிழ் பயன்படுத்தக் கோரிய வழக்கின் தீர்ப்பை உயர் நீதிமன்ற மதுரை கிளை ஒத்திவைத்துள்ளது.
உலகப் பிரசித்தி பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் குடமுழுக்கு விழாவின் போது, சமஸ்கிருத மொழிக்கு இணையாகத் தமிழ் மொழியிலும் மந்திரங்கள் மற்றும் வேதங்களை முழுமையாகப் பயன்படுத்த உத்தரவிடக் கோரிய வழக்கின் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
கரூரைச் சேர்ந்த வழக்கறிஞர் தமிழ் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவில், தமிழகத்தில் உள்ள திருக்கோயில்களில் குடமுழுக்கு விழாக்களின் போது சமஸ்கிருத மொழிக்கு இணையாகத் தமிழிலும் மந்திரங்கள் ஓதப்பட வேண்டும் என நீதிமன்றம் ஏற்கனவே பல்வேறு வழக்குகளில் உத்தரவிட்டுள்ளது.
ஆனால், நடைமுறையில் சில முக்கியக் கோயில்களில் சமஸ்கிருத மொழி மட்டுமே முன்னிலைப்படுத்தப்படுகிறது. எனவே, இந்து சமய அறநிலையத்துறை அமைத்துள்ள குடமுழுக்கு வழிகாட்டுதல் உயர்மட்டக் குழுவின் அறிக்கையைப் பெற்று, அனைத்துக் கோயில்களிலும் தமிழிலும் மந்திரங்கள் ஓதுவதை உறுதி செய்ய வேண்டும்; குறிப்பாக, வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள மதுரை மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கிலும் சமஸ்கிருதத்திற்கு இணையாகத் தமிழ் மொழி பயன்பாட்டை முழுமையாக நடைமுறைப்படுத்த உத்தரவிட வேண்டும் எனக் கோரப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: சமஸ்கிருதத்திற்கு இணையாக தமிழ்! மருதமலை குடமுழுக்கு வழக்கிற்கு சென்னை உயர்நீதிமன்றம் முற்றுப்புள்ளி!
இந்த மனுக்கள் நீதிபதி சி. சரவணன் முன்பு இன்று இறுதி விசாரணைக்கு வந்தது. அப்போது கோயில் நிர்வாகத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், கடந்த குடமுழுக்கு நன்னாளிலும் சரி, தற்போது வரும் செப்டம்பர் 17-ஆம் தேதி நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் மகா கும்பாபிஷேகத்திலும் சரி, சமஸ்கிருத மந்திரங்களுடன் சேர்ந்து பன்னிரு திருமுறைகள் மற்றும் தமிழ் வேதங்கள் முழுமையாக முழங்கவே குடமுழுக்கு விழா சிறப்பான முறையில் நடத்தப்பட உள்ளது எனத் திட்டவட்டமாக விளக்கமளித்து உறுதி கூறினார்.
அனைத்துத் தரப்பு காரசார வாதங்களையும் பதிவு செய்துகொண்ட நீதிபதி சி. சரவணன், இந்த வழக்கின் இறுதித் தீர்ப்பை எவ்வித தேதியும் குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்கு! ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு!