மதுரையின் புதிய அடையாளம்: மேம்பாலத்திற்கு ‘நேதாஜி’ பெயர்.. முதல்வர் அறிவிப்பு!
மதுரை தமுக்கம் மைதானம் முதல் நெல்பேட்டை அண்ணா சிலை வரை கட்டப்பட்டுள்ள புதிய மேம்பாலத்திற்கு 'நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்' எனப் பெயர் சூட்டப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மதுரை மாநகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், தமுக்கம் மைதானம் முதல் நெல்பேட்டை அண்ணா சிலை வரை கட்டப்பட்டுள்ள புதிய மேம்பாலத்திற்கு 'நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மேம்பாலம்' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. திராவிட மாடல் ஆட்சியில் நீண்ட மேம்பாலங்களை அமைத்துச் சாதனை படைத்து வருவதன் ஒரு பகுதியாக, மதுரையில் இந்த 1.3 கிலோமீட்டர் நீளமுள்ள மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
இந்திய நாட்டின் விடுதலைக்காகத் தனக்கென ஒரு தனிப் பாதையை உருவாக்கி, தென்மாவட்ட மக்களை விடுதலைப் போரில் அதிக அளவில் ஈடுபடுத்திய வீரத்தின் அடையாளமாக நேதாஜி திகழ்வதால், அவருக்குப் பெருமை சேர்க்கும் வகையில் இந்தப் பெயர் சூட்டப்படுவதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ரூ.213 கோடி மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள இந்தப் பாலத்தை, வரும் 21-ஆம் தேதி சனிக்கிழமை அன்று நடைபெறவுள்ள தனது மதுரைப் பயணத்தின் போது முதலமைச்சர் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைக்கிறார்.
இந்த மேம்பாலம் பயன்பாட்டிற்கு வருவதன் மூலம், தமுக்கம், கோரிப்பாளையம் மற்றும் நெல்பேட்டை பகுதிகளில் நிலவும் கடுமையான போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தென்மாவட்ட மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் நேதாஜியின் பெயரைச் சூட்டியுள்ள முதலமைச்சரின் இந்த அறிவிப்புக்கு மதுரை மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
இதையும் படிங்க: "பிப். 22-ல் அடிக்கல்.. பிரதமர் மோடி திறப்பார்" புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகம் பேட்டி!
இதையும் படிங்க: "திமுக கூட்டணி தாலி கட்டிய மனைவியை போன்றது" முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கிண்டல்!