×
 

"பிப். 22-ல் அடிக்கல்.. பிரதமர் மோடி திறப்பார்" புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகம் பேட்டி!

சுதந்திரப் போராட்ட வீரர் 'கப்பலோட்டிய தமிழன்' வ.உ. சிதம்பரனாருக்கு மதுரையில் 140 அடி உயரத்தில் பிரம்மாண்ட திருவுருவச் சிலை அமையவுள்ளதாகப் புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகம் அறிவித்துள்ளார். 

மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகம், மதுரையின் அடையாளமாக மாறப்போகும் வ.உ.சி சிலைத் திட்டம் குறித்த முக்கியத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

மதுரை கப்பலூர் பகுதியில் உள்ள பி.டி.ஆர் (P.T.R) கல்லூரி வழங்கியுள்ள 2.5 ஏக்கர் நிலப்பரப்பில், வ.உ. சிதம்பரனாரின் முழு திருவுருவச் சிலை அமையவுள்ளது. இந்தச் சிலை 140 அடி உயரம் கொண்டதாக வடிவமைக்கப்பட உள்ளது. சிலையின் முகப் பகுதியை மக்கள் அருகில் சென்று பார்க்கும் வகையில் 2 லிஃப்ட் வசதிகளும் இதில் அமைக்கப்பட உள்ளன.

இந்தச் சிலைக்கான அடிக்கல் நாட்டு விழா வரும் பிப்ரவரி 22-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தியக் குடியரசு துணைத்தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு சிலைக்கு அடிக்கல் நாட்ட உள்ளார். இந்த விழாவில் அரசியல் கட்சித் தலைவர்கள் மட்டுமின்றி, முன்னணித் திரை நட்சத்திரங்களும் பங்கேற்க உள்ளனர். இந்தச் சிலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பூங்கா, நூலகம் உள்ளிட்டக் கட்டுமானப் பணிகளுக்காகச் சுமார் 10 கோடி ரூபாய் செலவிடப்பட உள்ளது.

இதையும் படிங்க: "திமுக கூட்டணி தாலி கட்டிய மனைவியை போன்றது" முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கிண்டல்!

அடுத்த 15 மாதங்களுக்குள் சிலைப் பணிகளை முழுமையாக முடித்து, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களைக் கொண்டு சிலையைத் திறக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த முயற்சி எந்தவொரு அரசியல் கட்சிக்கும் சார்பானது அல்ல; இது தேசபக்தியைப் போற்றும் ஒரு பொதுவான முயற்சி என ஏ.சி. சண்முகம் தெரிவித்தார்.

மதுரையில் அமையவுள்ள இந்தச் சிலை, கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலையைப் போலவே தமிழகத்தின் மிக முக்கியமான சுற்றுலா மற்றும் வரலாற்று அடையாளமாகத் திகழும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: சுடுகாட்டில் வடிவேலு புலம்புவது போல முதல்வர் புலம்புகிறார்: மதுரையில் செல்லூர் ராஜு கிண்டல்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share