தமிழகத்தில் 3 உயர் ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்! உள்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
தமிழகத்தில் 3 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்; நிர்வாகத்துறை ஏடிஜிபியாக மகேஷ்வர் தயாள், லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக அருண், சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக அன்பு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழக காவல்துறையின் மிக முக்கியப் பிரிவுகளான சட்டம் ஒழுங்கு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையில் பெரிய அளவிலான அதிரடி சீரமைப்புகளை மேற்கொண்டு, 3 மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து புதிய தவெக அரசு இன்று அதிகாரப்பூர்வ உத்தரவை வெளியிட்டுள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தின் உள்துறை (எஸ்சி) துறை இன்று வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அரசாணையின்படி (Police Note No.SC/23/2026), காவல்துறையின் மிக முக்கியப் பிரிவான சட்டம் ஒழுங்கு கூடுதல் காவல்துறை தலைமை இயக்குநராக (ADGP Law & Order) டி.எஸ்.அன்பு, ஐபிஎஸ் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். கட்டாயக் காத்திருப்புப் பட்டியலில் (Compulsory Wait) இருந்த இவர், தற்போது சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி பொறுப்புக்குக் கொண்டுவரப்பட்டுள்ளார்.
இதுவரை சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாகப் பணியாற்றி வந்த டாக்டர் மகேஷ்வர் தயாள், ஐபிஎஸ் அவர்கள், காவல்துறை நிர்வாகத்துறை ஏடிஜிபியாக (ADGP Administration) மாற்றப்பட்டுள்ளார். நிர்வாகத்துறை டிஜிபி அந்தஸ்தில் காலியாக இருந்த பணியிடம், தற்போது ஏடிஜிபி அந்தஸ்திற்குத் தரமிறக்கப்பட்டு (Downgrading) மகேஷ்வர் தயாள் அங்கு நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மத்திய கிழக்கு பதற்றம்: இந்தியப் பொருளாதாரத்தைப் பாதுகாக்க 3Fs-ஐ கண்காணிக்க வேண்டும் - நிர்மலா சீதாராமன்..!!
இதேபோல், மாநிலத்தின் முக்கியப் புலனாய்வு அமைப்பான லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத்துறையின் (DVAC) புதிய இயக்குநராக, கட்டாயக் காத்திருப்புப் பட்டியலில் இருந்த மூத்த ஐபிஎஸ் அதிகாரி ஏ.அருண் நியமிக்கப்பட்டுள்ளார். லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் டிஜிபி அந்தஸ்தில் காலியாக இருந்த நிலையில், அந்தப் பணியிடமும் தற்போது ஏடிஜிபி அந்தஸ்திற்குத் தரமிறக்கப்பட்டு, ஏ.அருண் அவர்களுக்கு அந்தப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
தலைமைச் செயலகத்தின் உள்துறைச் செயலரால் இன்று பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த அதிரடி உத்தரவுகள் அனைத்தும் உடனடியாக அமலுக்கு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றத் தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவதோடு, லஞ்ச ஒழிப்புப் பிரிவின் செயல்பாடுகளை நெறிமுறைப்படுத்துவதற்காகவும் இந்த முக்கிய ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகக் கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. புதிய அதிகாரிகள் மூவரும் விரைவில் தங்களது பொறுப்புகளை அதிகாரப்பூர்வமாக ஏற்கவுள்ளனர்.
இதையும் படிங்க: இதில் ஏன் இவ்வளவு கதறல்? திமுக தலைவர் ஸ்டாலினுக்கு காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் பதிலடி!