×
 

கல்வி கடையாச்சு..! சீரழிஞ்சு போச்சு... மத்திய அரசை சாடிய மாணிக்கம் தாகூர்..!!

பொறியியல் கல்லூரிகள் மூடப்படும் விவகாரத்தை சுட்டிக்காட்டி மாணிக்கம் தாகூர் விமர்சனம் செய்துள்ளார்.

கல்வி இன்று கோயிலாக இல்லை என்றும் கடையாக மாறிவிட்டது எனவும் பொறியியல் கல்லூரிகள் மூடப்படும் விவகாரத்தை சுட்டிக்காட்டி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் விமர்சனம் செய்திருக்கிறார். நாடு முழுவதும் 58 பொறியியல் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. அதில் தமிழ்நாட்டிலேயே 12 கல்லூரிகள் மூடப்பட்டிருப்பது கவலைக்குரியது என்று குறிப்பிட்டுள்ளார். ஒரு காலத்தில் பொறியியல் படிப்பு நடுத்தர குடும்பங்களின் கனவாக இருந்தது என்று தெரிவித்த மாணிக்கம் தாகூர், இன்று அது அதிக கட்டணம் வசூலிக்கும் வணிகமாக மாறிவிட்டது என்றார். லாபம் கிடைக்கும் வரை மாணவர் சேர்க்கை., லாபம் குறைந்தவுடன் கல்லூரிகளுக்கு பூட்டு. இதுதானா புதிய இந்தியாவின் கல்விக் கொள்கை ஒரு கேள்வி எழுப்பினார்

ஆர்எஸ்எஸ் சிந்தனையால் வழிநடத்தப்படும் மத்திய கல்வி அமைச்சகம், கல்வியை ஒரு அடிப்படை உரிமையாகப் பார்க்காமல், சந்தைப் பொருளாக மாற்றிவிட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார். புதிய கல்விக் கொள்கை (NEP) குறித்து பெரிய விளம்பரங்கள் செய்தாலும், அதன் மத்தியில் உயர்கல்வியின் அடிப்படை பிரச்சினைகள், கல்விக் கட்டண உயர்வு, வேலைவாய்ப்பு பற்றாக்குறை, தரமான அரசு முதலீட்டின் குறைவு, கல்வி நிறுவனங்களின் வணிகமயமாக்கல் ஆகியவை தீர்க்கப்படவில்லை என்றும் அதன் விளைவாக நாடு முழுவதும் 58 பொறியியல் கல்லூரிகள் மூடப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார். 

தமிழ்நாட்டில் மட்டும் 12 கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன என்றும் மாணவர்கள் படிப்பை விட கல்விக் கடனைப் பற்றி கவலைப்படுகிறார்கள். பட்டம் பெற்ற இளைஞர்கள் வேலைவாய்ப்புக்காக அலைகிறார்கள். கல்வி நிறுவனங்கள் சமூகப் பொறுப்பை விட வருமானத்தையே முன்னிலைப்படுத்தும் நிலை உருவாகியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: தவெக 'இண்டி' கூட்டணியில் இணையுமா 2026?: காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் பதில்!

கல்வியை சந்தையின் கைகளில் ஒப்படைத்தால், மாணவர்கள் வாடிக்கையாளர்களாகவும், கல்லூரிகள் கடைகளாகவும் மாறிவிடும் என்றும் அப்போது லாபம் இல்லாத கடைகள் மூடப்படுவது போல, கல்லூரிகளும் மூடப்படும் எனவும் குறிப்பிட்ட மாணிக்கம் தாகூர், கல்வி விற்கப்படும் பொருள் அல்ல. அது சமூக முன்னேற்றத்தின் அடித்தளம். கல்வியை வணிகமயமாக்கும் கொள்கைகளிலிருந்து விலகி, அனைவருக்கும் தரமான, மலிவான, சமத்துவமான உயர்கல்வியை உறுதி செய்வதே அரசின் முதல் பொறுப்பாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். 

இதையும் படிங்க: விஜய் தலைமையில் தோழமை கட்சிகள் கூட்டம்: காங்கிரஸ் நிர்வாகிகளை நேரில் அழைத்த தவெக அமைச்சர்கள்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share