மேகதாது விவகாரம்: உதயநிதி சைலன்ட் மோடில் இருப்பது ஏன்..?? மாணிக்கம் தாகூர் நறுக் கேள்வி..!!
மேகதாது அணை விவகாரத்தில் உதயநிதி ஸ்டாலின் அமைதியாக இருப்பது ஏன் என்று மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பியுள்ளார்.
பெங்களூரு தெற்கு மாவட்டம் கனகபுரா தாலுகாவில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்டும் திட்டத்தை கர்நாடக அரசு தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. இதற்கான விரிவான திட்ட அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்துள்ளது. இந்தத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. எனினும், திட்ட அறிக்கைக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. தமிழகத்தின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்தத் தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனுவும் சமீபத்தில் (நேற்று முன்தினம்) உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்தச் சூழலில், கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார், “மேகதாது அணைக்கான பூமி பூஜையை விரைவில் நடத்துவோம்” என்று அறிவித்துள்ளார். இந்தப் பேச்சுக்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் ஏற்கெனவே உள்ள உச்ச நீதிமன்றத் தீர்ப்பு மற்றும் காவிரி நீர் தீர்ப்பாயத்தின் இறுதி உத்தரவுகளுக்கு எதிராக இந்தத் திட்டம் அமைவதாக தமிழகம் வாதிடுகிறது.
இதையும் படிங்க: மேகதாது அணை விவகாரம்! ஆக்ஷனில் இறங்கிய முதல்வர் விஜய்!! சட்ட நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள உத்தரவு!
இந்நிலையில், தமிழக முதலமைச்சர் விஜய், பிரதமர் நரேந்திர மோடிக்கு நேரடியாகக் கடிதம் எழுதியுள்ளார். மேகதாது அணைத் திட்டத்தால் தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதை சுட்டிக்காட்டிய அவர், தமிழகத்தின் நீர் உரிமையைப் பாதுகாக்கவும், லட்சக்கணக்கான விவசாயிகளின் நலனை காக்கவும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இதனிடையே, காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இந்த விவகாரத்தில் அமைதி காத்து வருவதாக விமர்சனம் செய்துள்ளார். உதயநிதி அவர்கள் இந்த issueல silent mode(அமைதியாக) ஏன்? இப்போதும் முதல்வர் ஜோசப் விஜய் நேரடியாக மோடிக்கு எழுதி, தமிழக உரிமைக்காக உறுதியான நிலைப்பாட்டை எடுத்திருக்கார்.
ஆனா “connecting call” பேசுற முன்னாள் முதல்வர் பழனிசாமி , எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி அதுக்கப்புறம் ஏன் நேரடியாக மோடியிடம் கேள்வி கேக்கல? “இது அரசியல் விவகாரம் அல்ல, தமிழ்நாட்டின் நீர் உரிமை மற்றும் விவசாயிகளின் உயிர்வாழ்வு சார்ந்த விஷயம். முதலமைச்சர் விஜய் பிரதமருக்கு எழுதிய கடிதத்துக்கு முழு ஆதரவு. தமிழ்நாடு ஒப்புதல் இல்லாமல் காவிரியில் எந்தத் திட்டமும் செயல்படுத்தக் கூடாது.. தமிழ்நாடு உரிமைக்காக ஒற்றுமையாக நிற்போம்” என்று அவர் வலியுறுத்தினார்.
முன்னாள் முதலமைச்சர் பழனிசாமியும் இந்தப் பிரச்னையில் உறுதியான நிலைப்பாடு எடுத்து வருவதாகக் குறிப்பிட்ட மாணிக்கம் தாகூர், அனைத்துக் கட்சிகளும் ஒன்றுபட்டு தமிழக உரிமைக்காகக் குரல் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மேகதாது அணைத் திட்டம் நடைமுறைக்கு வந்தால், காவிரி டெல்டா பகுதியில் நீர் பற்றாக்குறை அதிகரிக்கும், விவசாயம் பாதிக்கப்படும், குடிநீர் பிரச்னை உருவாகும் என தமிழகம் அஞ்சுகிறது.
இந்த விவகாரம் தொடர்ந்து இரு மாநிலங்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. தமிழக அரசு, மத்திய அரசின் தலையீட்டை எதிர்பார்த்துள்ள நிலையில், அரசியல் கட்சிகள் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கன்னடம் பிறக்கும் முன்பே காவிரி எங்களுடையது! மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகாவை வெளுத்து வாங்கிய சீமான்!