மக்கள் பணம் எங்கே.? பிரதமர் மோடிக்கு மாணிக்கம் தாகூர் சரமாரி கேள்வி..!!
பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.
காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர், பிரதமர் நரேந்திர மோடியை நேரடியாகக் குறிப்பிட்டு, பிஎம் கேர்ஸ் நிதியின் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வு குறித்து கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளார். அவர் கூறியதாவது, “மக்கள் பணம் எங்கே திரு. பிரதமர் அவர்களே? முற்றிலும் பூஜ்ய பொறுப்புணர்வு” என்று தொடங்கிய அவர், இந்த நிதி மக்களின் வியர்வையால் உருவான பணத்தையும் அரசு ஊழியர்களின் சம்பளப் பங்களிப்பையும் இணைத்து உருவாக்கப்பட்ட ஒன்று என்று வலியுறுத்தினார்.
மாணிக்கம் தாகூர் தனது கருத்தில், 2022-23 ஆம் நிதியாண்டில் மட்டும் 909.64 கோடி ரூபாய் நன்கொடை உள்ளிட்ட மொத்தம் 6,723.07 கோடி ரூபாய் வரவு வந்துள்ளதாகக் குறிப்பிட்டார். ஆனால் அதில் வெறும் 439.38 கோடி ரூபாய் மட்டுமே செலவழிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 6,283.68 கோடி ரூபாய் கையிருப்பில் உள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த எண்ணிக்கைகள் மக்களின் கண்களுக்குத் தெரிந்தாலும், அதன் பின்னால் உள்ள முழுமையான கணக்கு மற்றும் பயன்பாடு குறித்த தெளிவு இன்னும் இல்லை என்பதே அவரது முக்கியக் குற்றச்சாட்டு.அவர் மேலும் கூறியதாவது, 2022-23 நிதியாண்டிற்குப் பிறகு ஆடிட் அறிக்கைகள் ஏன் வெளியிடப்படவில்லை என்ற கேள்வி எழுகிறது. பொதுமக்களின் பணம் சம்பந்தப்பட்ட ஒரு நிதியில் இத்தகைய தாமதம் ஏற்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது.
இதையும் படிங்க: காங்கிரஸ் புதிய அரசியல் கணக்கு.. ஆகஸ்ட் 1-ல் தமிழகம் வரும் ராகுல்.. மாணிக்கம் தாகூர் அறிவிப்பு..!
மேலும், அமைச்சர்கள் உள்ளடங்கிய இந்த அமைப்பிற்கு தகவல் அறியும் உரிமைச் சட்டம் (ஆர்டிஐ) பொருந்தாது என்று கூறி தப்பிக்க முயல்வதும் சரியல்ல என்று அவர் வலியுறுத்தினார். ஒன்றிய அமைச்சர்களே இந்த நிதியின் அறங்காவலர்களாகப் பொறுப்பில் இருக்கும்போது, அவர்கள் சட்டப்படி பொது ஊழியர்களாக மக்களுக்குப் பதில் சொல்லியே தீர வேண்டும். எனவே பிஎம் கேர்ஸ் நிதி நிச்சயமாக ஆர்டிஐ சட்டத்தின் வரம்பிற்குள் வருகிறது என்று அவர் தெளிவுபடுத்தினார்.
இதையும் படிங்க: அண்ணாமலையின் புதிய இயக்கம்.. வடிவேலு பாணியில் கலாய்த்த தமிழக காங்கிரஸ் தலைவர்!